×

கீழடி 6ஆம் கட்ட அகழாய்வு!: அகரத்தில் 5 அடுக்கு உறைக்கிணறு கண்டுபிடிப்பு.. தொல்லியல்துறையினர் உத்வேகம்..!!

சிவகங்கை: கீழடியில் 6ம் கட்ட அகழாய்வில் 5 அடுக்கு உறைக் கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழடியில் 6ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியானது கடந்த பிப்ரவரி 19ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 5 கட்ட அகழ்வாராய்ச்சியின் தொடர்ச்சியை கண்டறியும் வகையிலும், அதேபோல தொன்மையான மனிதர்களின் வாழ்வியல் நடைமுறை, தொழில் நடைமுறை மற்றும் அவர்களது இன மரபியல் உள்ளிட்டவற்றை முழுமையாக அறியும் வகையில் தான் 5 கட்ட அகழ்வாராய்ச்சியை போன்று அல்லாமல் இந்த 6ம் கட்ட அகழ்வாராய்ச்சியானது விரிவான முறையில் கீழடி மட்டுமில்லாமல் கீழடியை சுற்றியிருக்கக்கூடிய கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட  4 இடங்களில் விரிவான முறையில் நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே இந்த அகழ்வாராய்ச்சியில் 10க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள், முதுமக்கள் தாழி, விலங்குகளின் எலும்புக்கூடுகள், பாசிமணிகள், சங்கு வளைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டறியப்பட்டிருக்கக்கூடிய நிலையில், தற்போது 5 அடுக்குகள் கொண்ட உறைகிணறானது கண்டறியப்பட்டுள்ளது. இந்த உறைகிணற்றில் மேலும் சில உறை அடுக்குகள் இருக்கும் என்பதால் அதனை முழுமையாக கண்டறியும் பணியில் தொல்லியல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த உறைகிணறானது சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக இருக்கக்கூடும் என தொல்லியல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள். கீழடி அகழ்வாராய்ச்சியில் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பொருட்கள் கண்டறியப்பட்டு வருவது தொல்லியல்துறையினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வரும் செப்டம்பர் இறுதியில் இந்த அகழ்வாராய்ச்சியானது நிறைவடையக்கூடிய நிலையில் தற்போது அகழ்வாராய்ச்சி பணியானது துரிதமாக நடைபெற்று வருகிறது.



Tags : phase ,Keezhadi 6th , Keezhadi excavation
× RELATED 4ம் கட்ட தேர்தல் 96 தொகுதியில் மனு தாக்கல் துவக்கம்