×

கடந்த இரண்டரை மாதத்தில் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரிப்பு

சேலம்:  தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பாதுகாப்புக்காகவும், சேமிப்புக்காகவும் வசதி படைத்த மக்கள் அதிகளவில் நகைகளை குவித்து வருவதால், பெரிய நகைக்கடைகளில் விற்பனை அதிகரித்துள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெரிய, சிறிய நகைக்கடைகள் உள்ளன. இந்த நகைக்கடைகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். நகை தொழிலை நம்பி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய, பெரிய நகைப்பட்டறைகள் உள்ளன. இந்த பட்டறைகளில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவுவதற்கு முன்பு ஒரு பவுன் தங்கம் 30 ஆயிரம் முதல் 32 ஆயிரம் வரை  விற்றது. கொரோனா வைரஸ் பரவியதற்கு பிறகு தமிழகம் முழுவதும் பெருவணிகம் முதல் சிறு வர்த்தகம் வரை அனைத்தும் முடங்கியது. இப்படி தொழில்கள் முடங்கியதால் நாடு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது.

இதனால் உலகம் முழுவதும் வசதிபடைத்தோரின் பார்வை தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது. உலகளவில் தங்கத்தில் முதலீடு செய்வது கடந்த இரண்டரை மாதத்தில் அதிகரித்துள்ளது. இதனால் தங்கத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இந்தியாவை பொறுத்தமட்டில் ஏற்கனவே இங்குள்ள மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை காலம், காலமாக கடைபிடித்து வருகின்றனர். தற்போது பொருளாதார பாதிப்பால்,கையில் பணம் உள்ளவர்கள், பொருளாதாரத்தில் வசதி படைத்தவர்கள் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனர். இதன் காரணமாக தற்போது தங்கத்தின் விலை மளமளவென உயர்ந்து வருகிறது. இதனால் ஏழை,எளிய- நடுத்தர மக்களுக்கு தங்கம் வாங்குவது என்பது எட்டாக்கனியாக மாறியுள்ளது. இது குறித்து சேலத்தை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர்கள் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள நகைக்கடைகளில் தினமும் பல கோடி மதிப்பிலான நகைகள் விற்பனையாகும். இதன் மூலம் அரசுக்கும் வருவாய் கிடைத்து வருகிறது. நகைகள் விற்பனைக்கு ஏற்ப நகை உற்பத்தி இருக்குமு். இந்தியாவில் தங்கத்தின் தேவையை இங்கிலாந்து, அமெரிக்கா, சவுதி அரேபியா, துபாய் உள்ளிட்ட நாடுகள் பூர்த்தி செய்கின்றன. வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு நாள் தோறும் பல கோடி மதிப்பிலான தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. தங்கத்தை பொருத்தமட்டில் தங்கத்தின் வரத்து, இருப்பில் உள்ளதை பொறுத்து, அதற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

கடந்த மார்ச் மாதம் பரவிய கொரோனாவால் பல நாடுகள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி இருக்கிறது. இதனால் புதிதாக முதலீடு செய்து, தொழில் தொடங்க யாரும் ஆர்வம் காட்டவில்லை. இதன் காரணமாக அமெரிக்கா, இந்தியா, சீனா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்பட பல நாடுகளில் உள்ள மக்கள் தங்களிடம் உள்ள பணத்தைக்கொண்டு தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனர். இதன் காரணமாக இந்தியாவில் தங்கத்தின் விலையானது கடந்த இரண்டரை மாதத்தில் பவுனுக்கு ₹11 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. தங்கம் விலை உயர்வை கண்டு நடுத்தர மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதன் காரணமாக பாதுகாப்புக்காகவும், சேமிப்புக்காகவும் தங்கத்தில் முதலீடு செய்ய அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். கொரோனாவுக்கு முன்பு நகைக்கடைகளில் என்ன வியாபாரம் நடந்ததோ, அதே அளவு வியாபாரம் தற்போதும் நடந்து வருகிறது.கையில் பணம் உள்ளவர்கள் நகைகளை வாங்கி குவித்து வருகின்றனர். தற்போது நடக்கும் வியாபாரத்தில் திருமணத்திற்கு வாங்குபவர்கள் 20 சதவீதம் தான். ஆனால் சேமிப்பாக வாங்குவோர் எண்ணிக்கை 80 சதவீதமாகும். இதன் காரணமாக நகைக்கடைகளில் பொதுமக்கள் வருகை குறையவில்லை.புதிதாக எவ்வித நகைகளும் விற்பனைக்கு வரவில்லை. ஏற்கனவே இருப்பில் உள்ள நகைகள்,அவசர தேவைக்காக நகைகளை விற்போர் நகைகள் தான், தற்போது விற்பனையாகி வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

நிலத்தை விட நகை முக்கியம்
நிலத்தில் பணத்தை முதலீடாக போட்டால்,அதை அவசர தேவைக்காக விற்க இரண்டு அல்லது மூன்று மாதமாகும். இதன் காரணமாக கொரோனாவுக்கு பின்பு நிலத்தில் முதலீடு செய்ய யாரும் ஆர்வம் காட்டவில்லை. இதனால் ரியல் எஸ்டேட் வியாபாரம் சரிந்துள்ளது. ஆனால் நகையில் பணத்தை போட்டால் எப்போது வேண்டுமானாலும் விற்று கொள்ளலாம். மேலும் தற்போது ஏறிவரும் தங்கத்தின் விலை உயர்வால், எதிர் காலத்தில் தங்கத்தை விற்றால், அதிக லாபத்தை பார்க்கலாம் என்ற எண்ணத்தில் தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர்.

நாணயத்திற்கு
தட்டுப்பாடு
நகைக்கடையில் ஒரு பவுன் நகை  வாங்குபவர்களிடம் கூட, குறைந்தபட்சம் ₹5 ஆயிரத்திற்கு மேல் செய்கூலி, சேதாரம் வாங்கப்படுகிறது. ஆனால் தங்க நாணயங்களுக்கு அப்படி இல்லை. கிராமுக்கு அன்றைய விலையில் இருந்து ₹50 முதல் 100 லாபம் வைத்து விற்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தங்க நாணயத்தை அதிகளவில் வாங்கிக்குவித்து வருகின்றனர். இதனால் பெரும்பாலான நகைக்கடைகளில் தங்க நாணயத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

சிறிய கடைகள் மூடும் அபாயம்
தங்கத்தின் விலை உயர்வால் பெரிய நகைக்கடைகளில்தான் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. ஆனால் குறைந்த முதலீடு போட்டு, வியாபாரம் செய்து வரும் நகைக்கடைகளில் விற்பனை சரிந்துள்ளது. பணம் கையில் இருப்பவர்கள் பெரிய கடைகளை நோக்கியே செல்கின்றனர். இதே சூழ்நிலை இன்னும் ஓரிரு மாதம் நீடித்தால் சிறிய கடைகளை மூடவேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பது தொழிலாளர்களின் குமுறல்.

Tags : Investment in gold ,
× RELATED வரலாற்றில் முதன்முறையாக ரூ.50,000ஐ தொட்ட...