×

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் தி.நகர் என்ஏசி ஜூவல்லரியின் ரூ.7 கோடி சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் தி.நகரில் உள்ள என்ஏசி ஜூவல்லரியை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இதன்படி 20 ஆயிரத்து 292 சதுர அடியில் அமைந்துள்ள தரைத்தளம் உள்ளிட்ட 4 மாடி கட்டிடத்தை முடக்கி மத்திய அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.7 கோடியாகும். இது தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: போலி பில் தயாரித்து மோசடி செய்தது தொடர்பாக ஆர்.ஏ.டிஸ்டிபியூட்டர்ஸ் என்ற நிறுவனத்தின் மீது  சூரத்தில் உள்ள ஐசிஐசிஐ வங்கி கிளை சிபிஐயில் உள்ள குற்றப்பிரிவில் புகார் அளித்தது. இதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறை 9 நிறுவனங்களின் கணக்குகளை ஆய்வு செய்தது. இதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள 3 நிறுவனங்கள் மற்றும் ஹாங்காங்கில் உள்ள 15 நிறுவனங்கள் பெயரில் போலி பில்கள் தயாரித்து மிகப் பெரிய தொகை மோசடி செய்து இருப்பது கண்டறியப்பட்டது.

இதில் முக்கியமாக வந்தனா அண்ட் கோ, நேச்சுரல் டிரேடிங் கம்பெனி, மாருதி டிரேடிங் உள்ளிட்ட 469 பிற நிறுவனங்கள் ஆக்சிஸ் வங்கியில் கணக்கு வைத்து இருப்பது கண்டறியப்பட்டது. ஆக்சிஸ் வங்கியில் கணக்குகளைக் கொண்ட இந்த 8 நிறுவனங்கள் பல்வேறு காசோலை மூலம் சுமார் 2,700 நிறுவனங்களிடம் இருந்து நிதி பெற்றுள்ளது தெரியவந்தது. இந்த மோசடியில் அப்ரோஸ் முகமது ஹசன் பட்டா, மதன்லால் ஜெயின், பிலால் ஹாரூன் கிலானி, ஜெயேஷ் தேசாய், ராகேஷ் கோத்தாரி ஆகியோர் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இவர்கள் அனைவரும் போலி இயக்குனர்கள் மற்றும் பல போலி நிறுவனங்களை உருவாக்கியுள்ளனர். இதில் முக்கிய நபரான மதன்லால் ஜெயின், போலி பில்கள் மூலம் சட்டவிரோத முறையில் பனபரிமாற்றம் செய்து அதற்கு கமிஷன் பெற்றுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு மதன்லால் ஜெயின் சம்பாதித்த தொகையில் ஒரு பகுதி அனந்த பத்மநாபனின் கட்டுப்பாட்டில் உள்ள என்ஏசி ஜூவல்லர்ஸ் (பி) லிமிடெட் நிறுவனத்தின் வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டது தெரியவந்தது. விசாரணையில் ரூ.7 கோடி வரை இந்த வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டு இருப்பது தெரியவந்து. இதை மூடிமறைக்க, நேச்சுரல் டிரேடிங் அண்ட் கோ என்ற கம்பெனி என்ஏசி ஜூவல்லரியிடம் இருந்து வைர நகையை வாங்கியதை போன்று போலி பில்களை மதன்லால் ஜெயின் தயாரித்துள்ளார். இந்த நேச்சுரல் டிரேடிங் கம்பெனி மதன்லால் ஜெயின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனம்.  

இதன்படி அஃப்ரோஸ் முகமது ஹசன்பட்டா, மதன்லால் ஜெயின், மணீஷ் ஷா, ராகேஷ் கோத்தாரி மற்றும் ஜெயேஷ் தேசாய் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சொந்தமான 34.29 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. இதில் ஆனந்த பத்மநாபனுக்கு சொந்தமான, தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் 20,292 சதுர அடியில் அமைந்துள்ள என்ஏசி ஜூவல்லரி என்ற அசையா சொத்தும் அடங்கும். இதன் மதிப்பு ரூ.7 கோடியாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : The Nagar NAC Jewelery , Illegal Money Laundering, Prohibition Act, The Nagar NAC Jewelery, Rs 7 crore Asset Freeze, Enforcement Department
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...