×

திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவடி நாசருக்கு கொரோனா: தனியார் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவடி நாசருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருப்பவர் ஆவடி சா.மு.நாசர். இவர் ஆவடி, காமராஜர் நகர், புத்தர் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதற்கிடையில், கடந்த 4மாதங்களாக நாசர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஆவடி, பூந்தமல்லி, திருவள்ளூர் ஆகிய தொகுதிகளில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களை சந்தித்து அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை தொடர்ந்து வழங்கி வந்தார். மேலும், இவர் கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து தெருக்களில் கிருமிநாசினி தெளிப்பது, பிளீச்சிங் பவுடர் தூவுவது உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டு வந்தார்.

மேலும், இவர் ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளுக்கு சென்று டாக்டர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு முழு உடல் கவசம்,  முக கவசம், கையுறை, சானிடைசர் உள்ளிட்டவைகளை  வழங்கி வந்தார். இந்நிலையில், கடந்த 3ந்தேதி நாசர் காய்ச்சலால் அவதிப்பட்டார். இதனையடுத்து, அவர், தனக்கு கொரோனா தொற்று உள்ளதா? என்பதை அறிந்துகொள்ள, தனியார் ஆய்வகத்தில் பரிசோதனை செய்தார். அப்போது, அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவரை உறவினர்கள் அம்பத்தூர் அடுத்த வானகரத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தகவல் அறிந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மாவட்ட செயலாளர் நாசரை செல்போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Avadi Nasser ,DMK ,Tiruvallur South District ,hospital ,Corona , Tiruvallur, South District DMK Secretary, Avadi Nasser to Corona, Private Hospital
× RELATED காணொலி காட்சி மூலம் திமுக பொதுக்குழு கூட்டம்: ஆவடி நாசர் அறிக்கை