ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டியதை தொடர்ந்து புதிய பாபர் மசூதி கட்டும் பணி ஆரம்பம்: 15 பேர் கொண்ட அறக்கட்டளை உருவானது

லக்னோ: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டதை தொடர்ந்து, அரசு ஒதுக்கிய 5 ஏக்கர் நிலத்தில் புதிய பாபர் மசூதி கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இதற்காக, அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் தற்போது ராமர் கோயில் கட்டப்படும் இடத்தில் இருந்த பாபர் மசூதி, 1992ல் கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. இந்த இடத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் பிரதமர் மோடி, இதற்கான அடிக்கல்லை நாட்டினார். அதேபோல், இந்த இடத்தில் இருந்த பாபர் மசூதியை வேறு இடத்தில் அமைப்பதற்காக உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, அயோத்திக்கு அருகே 5 ஏக்கர் நிலத்தை  அரசு ஒதுக்கி இருக்கிறது.

ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டதை தொடர்ந்து, மசூதியை கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இதற்காக, 15 பேர் கொண்ட அறக்கட்டளையை சன்னி வக்பு வாரியம் நேற்று அமைத்தது. இதன் அலுவலகம் லக்னோவில் செயல்பட உள்ளது. இது தொடர்பாக அறக்கட்டளையின் முக்கிய நிர்வாகி கூறுகையில், ‘உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, மசூதி கட்டுவதற்காக புதிய இடத்தை தானிப்பூர் கிராமத்தில் அரசு முறைப்படி எங்களிடம் வழங்கியது. அங்கு மசூதி கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக, அறக்கட்டளைக்கான வங்கிக் கணக்கு தொடங்கப்படுகிறது,’’ என்றார். தானிப்பூரில் மசூதி அமைவதை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ள அப்பகுதி மக்கள், இதனால், தங்கள் பகுதி வளர்ச்சி அடையும் என்று கூறியுள்ளனர்.

* தலித்துக்கு முதல் பிரசாதம்

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்துக்கு உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் சென்றபோது, அயோத்தியில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த மகாவீர் என்பவரின் வீட்டில் சாப்பிட்டார். அதை நினைவில் வைத்திருந்த யோகி, ராமர் கோயிலுக்கு அடிக்கல்  நாட்டப்பட்டதற்கான முதல் பிரசாதத்தை, அவருக்கு வழங்கி கவுரவப்படுத்தி இருக்கிறார்.

Related Stories: