நிலப்பிரச்னை தொடர்பான விவகாரம் திருப்போரூர் திமுக எம்எல்ஏவுக்கு ஜாமீன்: ஐகார்ட் உத்தரவு

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தொகுதி திமுக எம்எல்ஏ இதயவர்மன், அவரது தந்தை லட்சுமிபதி உள்பட 11 பேர் மீது, திருப்போரூர் அடுத்த செங்காடு கிராமத்தில் நிலப் பிரச்னை தொடர்பாக கடந்த மாதம் நடந்த மோதலில் துப்பாக்கி சூடு நடத்தியதாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், கைது செய்யப்பட்ட எம்எல்ஏ இதயவர்மன் உள்பட 11 பேர், ஜாமீன்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, எதிர்தரப்பினர் அரிவாளால் வெட்டியதால், தற்காப்புக்காக துப்பாக்கி சூடு நடத்தியதாக மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும், இந்த சம்பவத்தில் காயமடைந்த சீனிவாசன் என்பவர் குணமடைந்து வீடு திரும்பி விட்டதால் ஜாமீன் வழங்க வேண்டும் எனவும், லட்சுமிபதி அளித்த புகாரின்படி கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு வக்கீல், வழக்கின் விசாரணை முடியவில்லை. தீவிரவாத தொடர்புகள் குறித்து விசாரணை நடந்து வருவதாக தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, காயமடைந்தவர் குணமடைந்து வீடு திரும்பி விட்டார்.

மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டி, இதயவர்மன் உள்பட 11 பேருக்கும் தலா ரூ.10 ஆயிரத்துக்கான சொந்த உத்தரவாதம், அதே தொகைக்கான 2 பேர் உத்தரவாதம் செலுத்த உத்தரவிட்டு ஜாமீன் வழங்கினார். மேலும், மனுதாரர் இதயவர்மன் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு ரூ.3 லட்சம்  வழங்க வேண்டும். மேலும், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இதயவர்மன், வேலூரில் தங்கி, நகர காவல் நிலையத்தில் காலை, மாலை இருவேளை கையெழுத்திட வேண்டும். மற்ற 10 பேர் திருப்போரூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நீதிபதி நிபந்தனை விதித்தார்.

Related Stories: