சென்னை- சேலம் எட்டு வழி சாலைக்கு எதிர்ப்பு கருப்பு கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் மற்றும் அதை சுற்றியுள்ள பெரும்பாலான கிராமங்களில் விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டு மக்கள் வாழ்கின்றனர். இந்தவேளையில், ரூ.10 ஆயிரம் கோடியில், சென்னை- சேலம் 8 வழி பசுமை சாலை அமைக்க மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டன. சென்னையில் இருந்து சேலம் வரை 274 கிமீ தூரம் கொண்ட இந்த சாலை, காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டத்தில் மட்டும் சீத்தனஞ்சேரி, சாத்தனஞ்சேரி, மலையாங்குளம், புத்தளி, புலிவாய், மணல்மேடு, கருவேப்பம்பூண்டி, ஒழுகரை, சிலாம்பாக்கம், வெங்காரம், அனுமந்தண்டலம், மானாம்பதி, பெருநகர் உள்பட 20 கிராமங்கள் வழியாக சாலை அமைக்கப்படுகிறது. இதனால், ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள், விவசாய கிணறுகள், 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள், கண்மாய், ஏரி, கால்வாய் என நீர்நிலைகள் மட்டுமின்றி வனப்பகுதிகளும் பாதிப்படைக்கின்றன.

இதனால் கிராம மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் அழியும் நிலை உள்ளது. இதையொட்டி, எட்டு வழிச்சாலைக்கு தடை விதிக்க கோரி விவசாயிகள் உள்பட தன்னார்வலர்கள் பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில் மத்திய, மாநில அரசுகளின் நில கையகப்படுத்தும் அறிவிப்பாணை செல்லாது என தீர்ப்பு வெளியானது. இதையடுத்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு ஒரு சில நாட்களில் விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில், எட்டு வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதைதொடர்ந்து, உத்திரமேரூர் அடுத்த விசூர் கிராமத்தில் எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கம் சார்பில் நிர்வாகிகள் மூர்த்தி, வினோத் தலைமையில் விவசாயிகள், தங்களது நிலங்களில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.

Related Stories:

>