×

இலங்கை தாதா சாவு குறித்து ‘ரா’ பிரிவு அதிகாரிகள் கோவையில் விசாரணை

கோவை: கோவையில் கடந்த ஜூலை 4ம் தேதி இலங்கையின் போதை பொருள் கடத்தல், கொலை, நாசகார செயல்களில் ஈடுபட்டு வந்த தாதா அங்கோட லொக்கா (35) இறந்தார். இவர் மாரடைப்பு காரணமாக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டதாக உடன் இருந்த காதலி அமானி தாஞ்சி (27) தெரிவித்தார். சடலம் மதுரையில் தகனம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் மருத்துவமனையில் இறந்தது பிரதீப்சிங் என கூறப்பட்டது. தற்போது அவர்தான் தாதா அங்கோட லொக்கா என கூறப்படுகிறது. இதையடுத்து, சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்கி நடத்தி வந்தனர்.

ஆனால், தாதா லொக்கா இலங்கையை சேர்ந்த குற்றவாளி என்பதாலும் அவரது சாவில் மர்மம் இருப்பதாலும் இந்திய ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு (ரா) அதிகாரிகள் நேற்று கோவை வந்தனர். சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. சங்கர் மற்றும் எஸ்.பி. மாடசாமி ஆகியோரை சந்தித்து தாதாவின் இறப்பு மற்றும் அவர் தொடர்பான ஆதாரங்களை கேட்டனர். சில முக்கிய விவரங்களை இவர்கள் பெற்று சென்றதாக தெரிகிறது. இவ்வழக்கின் முக்கிய ஆதாரங்களில் பெரிய அளவில் சந்தேகம் இருப்பதாக தெரியவந்துள்ளது. லொக்கா மீது அவரது காதலி அமானிதாஞ்சி வெறுப்பில் இருந்துள்ளதாக தெரிகிறது.

இவரின் கணவரை கொலை செய்தது லொக்காதான் என்ற சந்தேகம் இருக்கிறது. சில நாட்களாக லொக்காவுக்கு உணவில் ‘ஸ்லோ பாய்சன்’ கலந்து தந்திருக்கலாம். இதன்மூலமாக இறப்பு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. லொக்காவுக்கு நிழல் உலக போதை கடத்தல் தொடர்பு உள்ளது. அந்த தொழில் போட்டியில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இவர் வைத்திருந்த லேப்டாப் மற்றும் செல்போன் பேச்சு பதிவுகளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைப்பற்றியுள்ளனர். வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் இ-மெயிலில் இவர் பல்வேறு தகவல்களை அனுப்பியிருப்பதாக தெரிகிறது. அந்த விவரங்களை ரா அமைப்பிடம் சி.பி.சி.ஐ.டி.யினர் தந்துள்ளனர்.

இதுதொடர்பாக, சி.பி.சி.ஐ.டி ஐ.ஜி. சங்கர் கூறுகையில், ‘‘இந்த வழக்கில் முக்கிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை. எங்களுக்கு கிடைத்த ஆதாரங்களை உறுதி செய்ய தேவையான விசாரணை நடத்தி வருகிறோம். எனினும் ரா பிரிவு அதிகாரிகள் வழக்கின் நிலவரம் கேட்டார்கள். சில தகவல்களை தந்துள்ளோம்’’ என்றார். பெண் வக்கீல் வீட்டில் சோதனை: இதனிடையே, இவ்வழக்கில் கைதாகி சிறையில் உள்ள வக்கீல் சிவகாமசுந்தரியின் மதுரை வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று 5 மணி நேரம் சோதனை நடத்தினர். அப்போது, வங்கி ஆவணம் மற்றும் இலங்கை பணம், 3 பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் சிக்கியுள்ளன.

* லொக்காவின் குடும்பம்
இலங்கையில் பெரேரா என அழைக்கப்படும் அங்கோட லொக்கா, அங்கோட மாவட்டம் முள்ளரியாவா கிராமத்தை சேர்ந்தவர். இவருக்கு நிசன் சாலா என்ற மனைவியும், நிமேஷ் சாகன் என்ற மகனும் உள்ளனர். தந்தை முதுமகே, தாய் சந்திரிகா, அக்கா சந்திரானி, அண்ணன் லக்மல் மற்றும் ஏகப்பட்ட உறவினர்கள் உள்ளனர். 2011ல் இருந்து அங்கோட லொக்கா கொலை வழக்கில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. பெரும் கோடீஸ்வரர்களை கடத்தி மிரட்டி சொத்து பறிமுதல் செய்வது, பல கோடி ரூபாய் மதிப்பில் போதை மருந்து கடத்துவது லொக்காவின் வாடிக்கை.

Tags : death ,Ra ,Dada ,Coimbatore ,faction officials ,Sri Lankan ,Raw ,section officials , Sri Dada death, ‘Raw’ section officers, Coimbatore, investigation
× RELATED எனக்கு வாக்களித்து எம்பி ஆக்கினால்...