மூடப்பட்ட இடத்தில் திறந்த மதுக்கடைக்கு தடை கொரோனா காலத்திலும் உத்தரவாதத்தை மீறுவதா? கோப்புகளை கலெக்டர்கள் நிராகரித்துள்ளனரா? டாஸ்மாக் வழக்கில் நீதிபதிகள் சரமாரி கேள்வி

மதுரை: மூடப்பட்ட இடத்தில் மீண்டும் திறக்கப்பட்ட கடைக்கு தடை விதித்த நீதிபதிகள், கொரோனா காலத்திலும் உத்தரவாதத்தை மீறி டாஸ்மாக் கடையை திறப்பதா?, கடை திறப்பது தொடர்பான கோப்புகளை கலெக்டர்கள் எங்காவது நிராகரித்துள்ளார்களா? என சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஜக்கம்பட்டியைச் சேர்ந்த ஓய்வு ராணுவ வீரர் கோபால், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ஜக்கம்பட்டி சத்யா நகரில் லெட்சுமிபுரம் ரோட்டில் பசுமை திட்ட வீட்டில் 2017ல் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. அதில், கடை திறக்க இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இறுதி விசாரணையின் போது டாஸ்மாக் தரப்பில் திறக்கமாட்டோம் என உறுதி கூறப்பட்டதால் வழக்கு முடிக்கப்பட்டது. இதன்பிறகு எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை.

கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தை சாதகமாக பயன்படுத்தி பசுமை வீட்டில் திறக்கமாட்டோம் என உறுதியளித்த அதே இடத்தில், டாஸ்மாக் கடை திறந்துள்ளனர். அருகிலேயே பார் வசதியும் உள்ளது. குடிகாரர்கள் மதுபாட்டில் மற்றும் பிளாஸ்டிக் கப்புகளை ஆங்காங்கே போட்டு செல்கின்றனர். இதனால், பொதுமக்களுக்கும், குழந்தைகளுக்கும் அபாயகரமான சூழல் நிலவுகிறது. இந்த நீதிமன்றத்தில் ஏற்கனவே அளித்த உத்தரவை மீறி, அதே இடத்தில் மீண்டும் கடை திறக்கப்பட்டுள்ளது. எனவே, திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை மூட உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் நேற்று விசாரித்தனர். வக்கீல் ஆர்.காந்தி ஆஜராகி, ‘‘இதே நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதியை மீறி, அவமதிக்கும் வகையில் நடந்துள்ளனர்’’ என்றார். டாஸ்மாக் வக்கீல் ஜமீல் அரசு ஆஜராகி, ‘‘கலெக்டரின் ஒப்புதலுடன், விதிகளுக்கு உட்பட்டே கடை திறக்கப்பட்டது’’ என்றார். அப்போது நீதிபதிகள், ‘‘டாஸ்மாக் திறப்பது தொடர்பான ேகாப்புகளை எங்காவது கலெக்டர்கள் நிராகரித்துள்ளனரா? இதுவரை நீதிமன்றம் பல உத்தரவுகளை பிறப்பித்திருந்தாலும், பல உத்தரவுகளை அதிகாரிகள் நிறைவேற்றவில்லை.

டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருமானம் ஒரு சில திட்டங்களுக்கு போகிறது என்பதைத் தவிர வேறு எந்த பொது நலனும் இல்லை. நிர்ணயிக்கப்பட்ட எம்ஆர்பியை விட ஏன் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. இந்த கொரோனா காலகட்டத்திலும் உத்தரவாதத்தை மீறி ஏன் திறக்க வேண்டும். குடிகாரர்கள் ஆங்காங்கே பாட்டில்களை போடுவது பொது அமைதியை கெடுக்கும் வகையில் உள்ளதே’’ என கேள்வி எழுப்பினர். பின்னர் கடை செயல்படத் தடை விதித்த நீதிபதிகள், அரசு மற்றும் டாஸ்மாக் தரப்பில் விரிவான பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: