×

கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனையில் தீ 8 நோயாளிகள் பலி: குஜராத்தில் பரிதாபம்

அகமதாபாத்: குஜராத்தில் கொரோனா மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 8 நோயாளிகள் கருகி பலியாகினர். குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ளது நவரங்கபுரா பகுதி. இங்கு, ‘ஷ்ரே’ என்ற தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. இது, சமீபத்தில் கொரோனா சிகிச்சைக்கான மையமாக மாற்றப்பட்டது. இதில், நேற்று அதிகாலை 3.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 5 ஆண், 3 பெண் நோயாளிகள் பரிதாபமாக கருகி இறந்தனர். இவர்கள் அனைவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த தீ விபத்து, மருத்துவமனையின் 4வது மாடியில் நடந்தது. தீ விபத்தில் காயமடைந்த பல நோயாளிகள் மீட்கப்பட்டு, அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது பற்றி விசாரணை நடத்துவதற்காக மாநில கூடுதல் தலைமை செயலாளர் சங்கீதா சிங் தலைமையிலான குழுவை இம்மாநில முதல்வர் விஜய் ரூபானி நியமித்துள்ளார். 3 நாட்களில் அறிக்கை அளிக்கும்படி இக்குழுவுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

* பிரதமர் இரங்கல்
இந்த விபத்து குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘மருத்துவமனையில் நடந்த தீ விபத்து பலி மிகவும் வேதனையைத் தருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிராத்திக்கிறேன்,’ என்று கூறியுள்ளார். மேலும், இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

* 3 பேரை காப்பாற்றிய வார்டு பாய்
தீ விபத்து நடந்தபோது தீவிர சிகிச்சை பிரிவில் 11 கொரோனா நோயாளிகள் இருந்தனர். தீ பரவியதை கண்டதும் சிராக் படேல் என்ற வார்டு பாய், 4வது மாடிக்கு ஓடினார். அதற்குள் அங்கிருந்த நோயாளி ஒருவரின் தலையில் தீப்பற்றியது. அவர் அலறினார். படேல் ஓடிச் சென்று அந்த தீயை அணைத்தார். கொரோனா நோயாளியால் தனக்கு ஆபத்து என்பதை அறிந்தும், 3 வயதான நோயாளிகளை ஒருவர் பின் ஒருவராக வெளியே தூக்கிச் சென்று காப்பாற்றினார்.

Tags : Gujarat ,hospital , Corona treatment, hospital, fire 8 patients, killed, awful in Gujarat
× RELATED சி.எஸ்.கே – குஜராத் அணிகள் மோதும் போட்டி: டிக்கெட் விற்பனை தொடக்கம்