நான்காவது நாளாக 110 உயிரிழப்பு கொரோனா மரணம் 4,500ஐ தொட்டது: வைரஸ் தொற்று 3 லட்சத்தை நெருங்குகிறது

சென்னை: தமிழகத்தில் ஒரே நாளில் 110 பேர் மரணம் அடைந்துள்ளனர். தொடர்ந்து நான்காவது நாளாக தினசரி பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கை 100 ஐ தாண்டி வருகிறது. மொத்த உயிரிழப்பு 4500 ஐ தாண்டியுள்ளது. அதே சமயம் தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் கொரோனா வைரஸ் தொற்று 3 லட்சத்தை எட்டும் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. தினசரி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதியாகிறது. அதேபோல தினசரி பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த வாரம் தினசரி 80 முதல் 90 பேர் மரணங்கள் பதிவாகியது.

ஆனால் தற்போது தினசரி 100க்கு மேற்பட்ட மரணங்கள் பதிவாகி வருகிறது. இந்நிலையில் நேற்றும் தமிழகத்தில் 110 மரணங்கள் பதிவாகி உள்ளது. இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் நேற்று 67,153 பரிசோதனைகள் செய்ததில் 5,684 பேருக்கு கொரோனா உறுதியானது. இதில் சென்னையில் 1,091 பேர், செங்கல்பட்டு 408, காஞ்சிபுரம் 336 பேர் உள்ளிட்ட 5,684 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் ஆண்கள் 3,380, பெண்கள் 2,304 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அளவில் ஆண்கள் 1,68,889 பேர், பெண்கள் 1,10,228, திருநங்கைகள் 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிப்பு குறைவு; பலி அதிகரிப்பு: தமிழகத்தில் கொரோனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,79,144 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் 6,272 பேர் குணமடைந்தனர். ஒட்டுமொத்தமாக 2,21,087 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 53,486 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று மட்டும் 110 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதில் தனியார் மருத்துவமனையில் 22 பேரும், அரசு மருத்துவமனையில் 88 பேரும் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 22 பேர், மதுரையில் 9 பேர், வேலூரில் 7 பேர், கோவையில் 6 பேர், விருதுநகரில் 5 பேர், திண்டுக்கல், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தலா 4 பேர், திருச்சி, தேனி, தென்காசி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, ஈரோடு, கடலூர் ஆகிய மாவட்டங்களில் தலா 3 பேர், கன்னியாகுமரி, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேர், விழுப்பும், திருப்பூர், நெல்லை, திருவாரூர், திருப்பத்தூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, நீலகிரி, அரியலூர் மாவட்டங்களில் தலா ஒருவர் என்று மொத்தம் 110 பேர் மரணம் அடைந்துள்ளனர். இவர்களில் 6 பேர் எந்தவித இணை நோய்கள் இல்லாமல் கொரோனா பாதிக்கப்பட்டு மட்டும் மரணம் அடைந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4571  ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

* 30 லட்சம் பரிசோதனைகள்  

தமிழகத்தில் நேற்று 67 ஆயிரத்து 153 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு நாளில் செய்யப்பட்ட அதிகபட்ச பரிசோதனையாகும். இதைச் சேர்த்து தமிழகத்தில் இதுவரை 30,20,714 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்தவமனையில் சோதனை மையம் அமைக்க அமைச்சர் ஐசிஎம்ஆர் அனுமதி அளித்துள்ளது.

Related Stories: