சர்ச்சைக்குரிய முர்மு திடீர் ராஜினாமா ஜம்மு காஷ்மீர் ஆளுநராக மனோஜ் சின்கா நியமனம்

புதுடெல்லி ஆக: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநர் முர்மு, திடீரென ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக, முன்னாள் மத்திய அமைச்சர் மனோஜ் சின்கா புதிய துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு, அம்மாநிலம்  ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. அப்போது, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் துணை நிலை ஆளுநராக கிரிஷ் சந்திர முர்மு நியமிக்கப்பட்டார். இவர் சமீப காலமாக, மத்திய அரசுடனும், தேர்தல் ஆணையத்துடனும் மோதல் போக்கில் ஈடுபட்டார்.

குறிப்பாக, தனது யூனியன் பிரதேசத்தில் 4ஜி இணையதள வசதியை வழங்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தினார். அது, ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என மத்திய அரசு தெரிவித்தது. அதேபோல், தேர்தல் நடத்துவது தொடர்பாகவும் சில சர்ச்சைக்குரிய கருத்துகளை முர்மு கூறினார். இதற்கு தேர்தல் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்தது. தேர்தல் நடத்துவது தனது அதிகாரத்துக்கு உட்பட்டது என்று கண்டித்தது. இதனால், முர்மு மீது மத்திய அரசு கடும் அதிருப்தியில் இருந்தது.

இந்நிலையில், முர்மு நேற்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பினார். இது உடனடியாக ஏற்கப்பட்டு, ஜம்மு காஷ்மீரின் புதிய துணை நிலை ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சர் மனோஜ் சின்கா நியமிக்கப்பட்டார். இதற்கான அறிவிப்பை ஜனாதிபதி மாளிகை வெளியிட்டது. பாஜ மூத்த தலைவர்களில் ஒருவரான மனோஜ் சின்கா, உத்தர பிரதேசத்தில் பிறந்தவர். தற்போது இவருக்கு வயது 61. கடந்த 1996ம் ஆண்டில் முதல் முறையாக மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார். இதுவரை 3 முறை மக்களவை எம்பி.யாக இருந்துள்ளார். மேலும், மத்திய  தொலைத்தொடர்பு மற்றும் ரயில்வே துணை அமைச்சர்களாக பணியாற்றி இருக்கிறார்.

* முர்முவுக்கு முக்கிய பதவி

முர்முவின் திடீர் ராஜினாமா விவகாரம், சிறிய சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் மத்திய அரசின் நிர்பந்தம் காரணமாக இந்த முடிவை எடுத்ததாக கூறப்பட்டது. ஆனால், கணக்கு தணிக்கை துறையில் மத்திய அரசு அவருக்கு முக்கிய பதவி அளிக்க உள்ளதாக, அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: