×

நவம்பர் வரை ரேஷனில் கூடுதல் இலவச அரிசி

மதுரை: மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் நேற்று நடந்த ஆய்வுக்கூட்டங்களில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ரேஷன் கடைகளில் நவம்பர் வரை மத்திய அரசு வழங்குகிற கூடுதல் அரிசி இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தார். தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கொரோனோ தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு நடத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, நேற்று காலை அவர் திண்டுக்கல் மாவட்டத்துக்கு வந்தார். அங்கு ரூ.8.88 கோடியில் புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார். ரூ.8.69 கோடியில் 42 பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் 420 பேருக்கு அம்மா டூவீலர் உள்பட 3,530 பயனாளிகளுக்கு ரூ.96 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

தொடர்ந்து அரசு அதிகாரிகள், அலுவலர்களுடன் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சித்திட்ட பணிகள், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் முதல்வர் பேசுகையில், ‘‘திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் பருவமழை துவங்கி நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. மக்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது. பொது விநியோகத் திட்டத்தின் மூலம், இந்த சோதனையான நேரத்திலும், வாழ்வாதாரத்தை இழந்திருக்கிற மக்களுக்கு அரசின் சார்பாக விலையில்லா அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு வழங்குகிற கூடுதல் அரிசி, அனைத்து அரிசி கார்டுதாரர்களுக்கும் நவம்பர் வரை இலவசமாக வழங்கப்படும்.  தகுதியுள்ள முதியோர்களுக்கு உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். இ-பாஸ் முறை எளிமைப்படுத்தப்படும்: பிற்பகல் மதுரை வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டங்களில் பங்கேற்றார். பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு இ-பாஸ் முறையை ரத்து செய்தாலும், தமிழகத்தில் ரத்தாகவில்லை. மாவட்டம்தோறும் இ-பாஸ் வழங்கிட ஏற்கனவே உள்ள அணியுடன் மேலும் ஒரு அணி அமைக்கப்பட்டுள்ளது. இ-பாஸ் வழங்கும் முறை எளிமைபடுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைக்கு மட்டும் மக்கள் இ-பாஸ் பயன்படுத்திட வேண்டும். இ-பாஸ் கட்டுப்பாடு காரணமாக தமிழகத்தில் தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது.

தென்மாவட்டங்களில் தொழில் செய்ய யார் முன்வந்தாலும், அவர்களுக்கான மானியம், உதவிகள் வழங்க அரசு தயாராக உள்ளது. தூத்துக்குடியில் ஒரு தனியார் நிறுவனம் விரைவில் துவங்கப்பட்டு, 5 ஆயிரம் பேர் நேரடியாக, ஒரு லட்சம் பேர் மறைமுகமாக வேலைவாய்ப்பு பெற உள்ளனர். கொரோனாவிற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையிலும், உலக சுகாதார மைய வழிகாட்டுதலின்படி தரமான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஓரளவு தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மதுரையில் 7 பேர் பிளாஸ்மா சிகிச்சை பெற்றுள்ளனர். கொரோனா சிகிச்சை பெறுவோர், குணமடைந்தோர், பலியானோர் விபரத்தை தினம் மும்முறை வெளியிடுகிறோம். எந்த தகவலையும் மறைக்கவில்லை. தொற்றினை தடுக்க துவக்கத்தில் பரிசோதனைகள் அதிகரித்ததில், அதிகம்பேர் கண்டுபிடிக்கப்பட்டனர். இப்போது தாக்கம் குறைந்து வருகிறது. மற்ற மாநிலங்களில் பரிசோதனைகள் குறைவு. ரூ.103 கோடி செலவில் 500 ஆம்புலன்ஸ்கள் மருத்துவப்பணிக்கு வாங்கப்படும்.
இவ்வாறு தெரிவித்தார்.

* ‘வழக்கு போட்டால் ஓடி ஒளிவார்’
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேலும் கூறுகையில், ‘‘நயினார் நாகேந்திரன் அதிமுகவில் இருந்துதான் பாஜகவிற்கு சென்றார். மீண்டும் அவர் அதிமுகவிற்கு வந்தால் நிச்சயமாக சேர்த்து கொள்வோம். எனக்கு இந்தி தெரியும் என்பது எஸ்.வி.சேகருக்கு எப்படி தெரியும்? அவர் முதலில் எந்த கட்சியை சேர்ந்தவர்? பாஜவை சேர்ந்தவரா? பாஜ, அதிமுக இணைந்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொண்டபோது தேர்தல் பிரசாரத்திற்கே வரவில்லையே. அதிமுகவிலும் எஸ்.வி.சேகர் இருந்தவர்தானே. கட்சிக்கு சரியான ஒத்துழைப்பு வழங்காததால் ஜெயலலிதாவால் நீக்கப்பட்டார். அவருக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவர் ஏதாவது பேசுவார், பின் வழக்கு போட்டால் ஓடி ஒளிந்துகொள்வார். ராமர் கோயில் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவின்படியே மத்திய அரசு செயல்படுகிறது’’ என்றார்.

‘இரு மொழி கல்வி கொள்கையே தொடரும்’
திண்டுக்கல்லில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘‘தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை குறைவு. மக்களை காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை. நோய் தொற்று ஏற்பட்ட பின்னரும் கவனக்குறைவாக இருந்தால், அபாயகட்டத்தை எட்ட வேண்டிய நிலை ஏற்படும். மக்களாகிய நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தமிழகத்தில் மும்மொழி கல்வியை ஏற்க மாட்டோம். இருமொழி கல்வி கொள்கையே தொடரும்’’ என்றார்.

Tags : Until November, in the ration, extra free rice
× RELATED மலர் கண்காட்சியை மலர்ச்சியோடு...