×

புதுகையில் இன்ஸ்பெக்டர் உட்பட 35 பேருக்கு மெமோ வழங்கியது ஏன்? மணல் கொள்ளைக்கு காவல் நிலையம் தேடி செல்லும் மாமூல்; கள்ளச்சாராயம் மதுவிற்பனை கஞ்சாவிலும் விளையாடும் கரன்சிகள்: அதிர்ச்சி தகவல்கள் அம்பலம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர், சப்இன்ஸ்பெக்டர்கள் உட்பட 35 பேருக்கு மெமோ வழங்கியது ஏன் என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 38 காவல் நிலையங்கள் உள்ளது. இங்கு 35 இன்ஸ்பெக்டர்கள், 100க்கும் மேற்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் குற்ற செயல்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட எஸ்பியாக பாலாஜி சரவணன் ஒரு மாதத்துக்கு முன் பொறுப்பேற்றார். இதைதொடர்ந்து அவர் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.

இதில் ஒன்றாக குற்ற செயல்களை தடுக்க தனிப்படைகளை எஸ்பி பாலாஜி சரவணன் அமைத்தார். மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்து குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களை தனிப்படையினர் கைது செய்து வருகின்றனர். ஆனால், சம்பந்தப்பட்ட காவல் நிலைய இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் சட்டவிரோத செயல்களை தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களுக்கு துணை போவதாக எஸ்.பிக்கு குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, எஸ்.பி பாலாஜி சரவணன் அதிரடியாக தாலுகா காவல் நிலையங்களை சேர்ந்த இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 35 பேருக்கு ஒரு வாரத்திற்கு முன் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.

அதில், ‘‘உங்களது ஏரியாக்களில் அதிகளவில் குற்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக மணல் கடத்தல், கள்ளச்சாராயம், மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்பனை, கஞ்சா கடத்தல் அதிகளவில் நடந்து வருகிறது. தனிப்படையினர் சோதனை நடத்தி குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.  நீங்கள் ஏன் நடவடிக்கை எடுத்து குற்ற செயல்களை தடுத்து குற்றவாளிகளை கைது செய்யவில்லை. இதனால், ஏன் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது. இந்த மெமோவுக்கு உடனடியாக பதில் அனுப்புங்கள்’’ என்று கூறப்பட்டிருந்தது. இச்சம்பவம் லகரத்தை நம்பி வாழ்க்கையை ஓட்டிய காக்கிகளுக்கு கிலியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: மாவட்டத்தில் ஆங்காங்கே மணல் கொள்ளை அதிகளவில் நடந்து வருகிறது. தாலுகாக்களில் உள்ள பல காவல் நிலையங்களில் மணல் கடத்துவதற்கு மாதத்துக்கு ஒரு டிராக்டருக்கு ₹3000, டிப்பர் லாரிக்கு ₹5 ஆயிரத்தை மாமூலாக ஒரு சில இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர்கள் பெற்று வருவது தெரிய வருகிறது. இதேபோல், கள்ளச்சாராயம் காய்ச்சும் கும்பலை பிடிக்கும் போலீஸ் குறைந்த அளவிலேயே பறிமுதல் காட்டி பெயரளவுக்கு கேஸ் போட்டு அனுப்புகின்றனர். ஒரு சிலரை பிடிபட்ட இடத்திலேயே பஞ்சாயத்து பேசி வாங்க வேண்டியதை வாங்கி கொண்டு அனுப்புகின்றனர்.

இதே நிலைமைதான் மதுபாட்டில் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களுக்கு குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்ட போலீசார் கரன்சியை பெற்று கொண்டு கண்டு கொள்ளாமல் விட்டு உள்ளனர். இதுபோன்ற குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக தான் போலீசாருக்கு எஸ்பி மெமோ கொடுத்துள்ளார். இவ்வாறு போலீசார் வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுகிறது. எஸ்.பி அளித்த மெமோவுக்கு போலீசார் பதில் அனுப்பிய பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவென்பது தெரியவரும். இதனால் புதுக்கோட்டை மாவட்ட போலீசார் அச்சத்தில் உள்ளனர்.



Tags : police station ,inauguration ,inspector , Revival, Inspector, Memo, Sand Robbery, Normal
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...