×

ராஜஸ்தான் காங்கிரஸில் 6 எம்.எல்.ஏ.க்கள் இணைந்ததற்கு எதிரான வழக்கு: இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் காங்கிரஸில் 6 எம்.எல்.ஏ.க்கள் இணைந்ததற்கு எதிரான மனுவில் இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்கள் சந்தீப் யாதவ், வாஜிப் அலி, தீப்சந்த் கெரியா, லகான் மீனா, ஜோகேந்திரா அவானா, ராஜேந்திர குதா ஆகிய ஆறு போ் கடந்த ஆண்டு ராஜஸ்தான் மாநில காங்கிரஸில் இணைந்தனா். இதற்கு மாநில சட்டப்பேரவை தலைவா் சி.பி.ஜோஷி கடந்த ஆண்டு செப்டம்பரில் அனுமதி அளித்தாா். இதற்கிடையில் ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. சச்சின் பைலட் 18 எம்.எல்.ஏ.-க்களுடன் எதிராக செயல்பட்டால் அசோக் கெலாட்டிற்கு சிக்கல் ஏற்பட்டது. தற்போதுள்ள சூழ்நிலையை சாதகமாக்கிக் கொள்ள விரும்பிய பாஜக மற்றும் பிஎஸ்பி கட்சிகள், ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற தனி நீதிபதி, சட்டப்பேரவை தலைவா் மற்றும் 6 பிஎஸ்பி எம்எல்ஏக்களும் இந்த விவகாரம் தொடா்பாக ஆகஸ்ட் 11ம் தேதி பதிலளிக்குமாறு கடந்த ஜூலை 30ம் தேதி உத்தரவிட்டாா். ஆனால், அந்த 6 பேரும் காங்கிரஸ் எம்எல்ஏக்களாக செயல்படுவதற்கு தடைவிதிக்க மறுத்துவிட்டாா். தனி நீதிபதியின் இந்த முடிவை எதிா்த்து, பாஜக மற்றும் பிஎஸ்பி சாா்பில் உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது எம்.எல்.ஏ. இணைப்புக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் முறையிடப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த உயர்நீதிமன்றம், மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, இந்த வழக்கை விசாரித்து வரும் ஒற்றை நீதிபதி அடங்கிய அமர்வே இதில் முடிவெடுக்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் வருகிற 11ம் தேதி இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் அசோக் கெலாட் நிம்மதி அடைந்துள்ளார்.



Tags : Rajasthan Congress ,High Court , Rajasthan, Congress, 6 MLAs, BSP, High Court
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...