டாஸ்மாக் கடைகள், ஓட்டல்களை திறக்க அனுமதிக்கும்போது, தட்டச்சு, கணினிப்பயிற்சி மையங்களை திறக்க அனுமதிக்காதது ஏன் : தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி

மதுரை : டாஸ்மாக் கடைகள், ஓட்டல்களை திறக்க அனுமதிக்கும்போது, தட்டச்சு, கணினிப்பயிற்சி மையங்களை திறக்க அனுமதிக்காதது ஏன் என்று உயர்நீதிமன்றக் கிளை தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. தட்டச்சுப் பயிற்சி மையங்களை திறக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வினவியுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மார்ச் 24ம் தேதி முதல் இம்மாதம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பேருந்து, ரயில் போக்குவரத்திற்கும் அனுமதி இல்லை. ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள், தட்டச்சு மற்றும் கணினிப் பயிற்சி மையங்கள் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தட்டச்சு மற்றும் கணினிப் பயிற்சி மையங்களை திறக்க அனுமதிக் கோரி செந்தில் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தட்டச்சு மற்றும் கணிணிப் பயிற்சி மையங்கள் மூடப்பட்டுள்ளதால் 10,000 குடும்பங்கள் பாதிப்ப்பட்டுள்ளன. தட்டச்சுப் பயிற்சி மையங்களை திறக்க அனுமதி கோரியும் அரசிடம் இருந்து பதில் இல்லை. ஆகவே தட்டச்சு மையங்களை திறக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும், என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் காணொளி காட்சி மூலம் விசாரணைக்கு வந்தது, அப்போது மனுதாரர் கோரிக்கையை கேட்ட நீதிபதிகள், டாஸ்மாக் கடை, ஓட்டல்களை அனுமதிக்கும் போது தட்டச்சுப்பயிற்சி மையங்களை அனுமதிக்காதது ஏன் என்று தமிழக அரசை நோக்கி கேள்வி எழுப்பினர். அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் சமூக விலகல் கடைப்பிடிக்கப்படுகிறதா என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தட்டச்சுப்பயிற்சி மையங்களைத் திறக்க அனுமதிக்கக் கோரிய மனுவிற்கு பதில் அளிக்க தமிழக தலைமைச் செயலர், பள்ளிக்கல்வித் துறை செயலருக்கு ஆணையிட்டனர்.

Related Stories:

>