×

கோவில், தர்காவில் அன்னதான திட்டத்தை மீண்டும் செயல்படுத்தி,பசியால் வாடும் பக்தர்களுக்கு உணவு வழங்குக : அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

சென்னை : கோயில் மற்றும் தர்காவில் அன்னதான திட்டத்தை மீண்டும் செயல்படுத்தி தனிமனித இடைவெளியுடனே அல்லது பார்சல் மூலம் பசியால் வாடும் பக்தர்களுக்கு உணவு வழங்க வேண்டுமென தமிழக அரசிடம் தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வேண்டுகோள் விடுவிக்கப்பட்டுள்ளது. நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில்:, 2011 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்களால் கோவில்களில் அன்னதான திட்டம் என்பதை அறிமுகம் செய்தது. இதன் மூலம் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் வருகின்ற கோவில்களில் மதிய வேளையில் அன்னதானம் தர வழி வகுக்கப்பட்டது.  இதன் அடிப்படையில் குறைந்தது 25 நபர்களுக்கும் அதிகபட்சம் 100 நபர்களுக்குமாக அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அன்ன தானம் வழங்கும் திட்டத்தை, முதலில், 360 கோவில்களில் துவக்கினீர்கள். அதன்பின், 1,000 கோவில்களுக்கு விரிவுப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து நாகூர் தர்கா உள்ளிட்ட சில தர்காக்களிலும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசின் சார்பில் கோவில்களில் அன்னதான திட்டம் செயல்பட்டு வருவதால், மதிய நேரத்தில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் ஒரு வேளை உணவுக்கே கஷ்டப்படும் மக்களின் வசதிக்காக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு பொதுமக்களின் வரவேற்பை பெற்றது. கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கோவில்கள் அடைக்கப்பட்டன. இதனால் கோவில்களில் அன்னதான திட்டமும் நிறுத்தப்பட்டது.கோயில், தர்காக்களில் அன்னதான திட்டம் நிறுத்தப்பட்டதன் காரணமாக உணவு அருந்து வந்த பக்தர்கள் உணவின்றி தவித்த நிலையில், அம்மா உணவகம் மூலம் இலவச உணவு வழங்கப்பட்டதன் காரணமாக பக்தர்களும் அம்மா உணவகம் சென்று உணவு சாப்பிட்டு பசியாறினர். தற்போது அம்மா உணவகங்களில் இலவச உணவு நிறுத்தப்பட்டதால், கோயில் அன்னதான திட்டத்தை நம்பியிருந்த பக்தர்கள் உணவின்றி தவித்து வருகின்றனர்.
தற்போது ஆண்டுதோறும் 10 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் வருவமானம் உள்ள கோயில்கள், பள்ளிவாசல்கள், தர்கா போன்ற வழிபாட்டு தலங்களை திறக்க தமிழக அரசு அனுமதித்துள்ள காரணத்தால், ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற பகுதிகளில் வழிபாட்டு தலங்கள்  திறக்கப்பட்டுள்ளது.

இதில் சில கோயில்களில் மட்டும் மீண்டும் அன்னதான திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. கொரோனா தொற்று என்பது படிப்படியாக தமிழகத்தில் குறைந்து வருவதன் காரணமாக தமிழக அரசும் பல்வேறு தளர்வுகளை அவ்வபோது அறிவித்து வருகிறது. அதன் அடிப்படையில் கோயில் மற்றும் தர்காவில் அன்னதான திட்டத்தை மீண்டும் செயல்படுத்தி தனிமனித இடைவெளியுடனே அல்லது பார்சல் மூலம் பசியால் வாடும் பக்தர்களுக்கு உணவு வழங்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். அதே போன்று ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15&ம் தேதி சுதந்திர தினத்தன்று கோயில்களில் சமபந்தி விருந்து நடைபெறுவதையும், இந்தாண்டு கோயில்களில் நடத்த வேண்டுமெனவும் தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Muslim League ,Tamil Nadu ,devotees ,Dargah ,Annadana , Temple, Dargah, Annadanam, Project, Government, Tamil Nadu Muslim League, Insistence
× RELATED அவதூறு பேசி ஆட்சிக்கு வர முயற்சி...