ஒகேனக்கல் அருகே வனப்பகுதியில் குட்டிகளுடன் முகாமிட்டுள்ள 20 யானைகள்: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

பென்னாகரம்: ஒகேனக்கல் அருகே, பிலிகுண்டுலு வனப்பகுதியில் குட்டிகளுடன் 20 யானைகள் முகாமிட்டுள்ளன. இதையடுத்து, அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில், கடந்த சில வாரங்களாக தென்மேற்கு பருமழை பரவலாக பெய்து வருகிறது. இதன் காரணமாக, ஒகேனக்கல், கோடுப்பட்டி, சின்னாறு வனப்பகுதிகளில் செடி,கொடிகள் செழித்து வளர்ந்து பச்சைப்பசேலென காட்சியளிக்கின்றன. ஆங்காங்கே நீர் நிலைகளில் தண்ணீரும் தேங்கியுள்ளது. இந்நிலையில், ஒகேனக்கல் அடுத்த பிலிகுண்டு வனப்பகுதியில், கடந்த சில நாட்களாக 20க்கும் மேற்பட்ட யானைகள், தங்களது குட்டிகளுடன் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள், வனப்பகுதியை ஒட்டியுள்ள ஒகேனக்கல்-பென்னாகரம் சாலையோரங்களில் அவ்வப்போது வந்து, அங்குள்ள இலை, தழைகளை சாப்பிட்டபடி சாவகாசமாக சுற்றித்திரிகின்றன.

பொதுவாக யானைக்கூட்டத்தில் குட்டிகள் இருந்தால், அவற்றின் பாதுகாப்புக்காக யானைகள் அதிக கவனம் எடுத்துக் கொள்ளும். குட்டிகளை யாரேனும் தொந்தரவு செய்வதாக கருதினால், ஆக்ரோஷமடைந்து தாக்க தொடங்கி விடும். இதையடுத்து, பென்னாகரம்-ஒகேனக்கல் சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு, வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே, வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள், யானைகள் கூட்டமாக முகாமிட்டுள்ளதால் அச்சமடைந்துள்ளனர். எனவே, வனத்துறையினர் விரைந்து செயல்பட்டு, யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: