சூறாவளி காற்றுடன் கனமழை: கொடைக்கானல் மலைக்கிராமங்கள் மின்சாரமின்றி இருளில் பரிதவிப்பு

கொடைக்கானல்: கொடைக்கானலில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழைக்கு 10க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் மரங்கள் சாய்ந்து இருளில் மூழ்கின. அத்துடன் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டன. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நேற்று முன்தினம் இரவு சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் கொடைக்கானலில் பூம்பாறை, மன்னவனூர், பூண்டி, கவுஞ்சி, கூக்கால், பழம்புத்தூர், புதுபுத்தூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களுக்கு செல்லக்கூ1டிய முக்கிய மின்பாதையில் 10க்கும் மேற்பட்ட ராட்சத மரங்கள் வேரோடு சாய்ந்தன.

மன்னவனூரை அடுத்த பாரிகோம்பை வனப்பகுதிக்குள் மரங்கள், மின்கம்பங்கள் மீது விழுந்ததால் 15க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் முற்றிலும் சேதமாயின.

இதனால் இந்த கிராமங்களுக்கு செல்ல கூடிய மின்சாரம் அடியோடு துண்டிக்கப்பட்டது. இதனால் மலைக்கிராமங்கள் அனைத்தும் இருளில் மூழ்கின.

அத்துடன் இந்த பகுதிக்கு செல்ல கூடிய முக்கிய பிரதான சாலைகளில் 30க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் இந்த பகுதிக்கு காய்கறி மற்றும் விவசாய வாகனங்கள் செல்ல முடியவில்லை. நெடுஞ்சாலைத்துறையினர் இந்த மரங்களை போர்க்கால அடிப்படையில் அகற்றியதால் நேற்று மாலை ஓரளவு போக்குவரத்து சீரானது.

இதுகுறித்து கொடைக்கானல் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் மேத்யூ கூறுகையில், ``மேல்மலைப்பகுதிக்கு செல்லக்கூடிய முக்கிய மின் வழிப்பாதையில் மரங்கள் வேரோடு சாய்ந்ததால் மின் சப்ளை தடைபட்டுள்ளது. அதிக அளவிலான பணியாளர்களை கொண்டு மின் சப்ளை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

நூற்றாண்டு மரம் சாய்ந்தது

திண்டுக்கல் மாவட்டம். ஒட்டன்சத்திரம் - பழநி சாலையில் நேற்று முன்தினம் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே இருந்த நூறு ஆண்டு பழமை வாய்ந்த ராட்சத புளிய மரம் வேரோடு பெயர்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள மின்சார, தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. மரம் சாலையில் விழுந்ததால் திண்டுக்கல் மற்றும் பழநி செல்லும் வாகனங்கள் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிக் கொண்டன.

தகவலறிந்து வந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் ஒட்டன்சத்திரம் நகரில் நேற்று முன்தினம் இரவிலிருந்து நேற்று மதியம் 2. மணி வரை நகர் பகுதி முழுவதும் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாயினர்

Related Stories: