ஆன்லைன் விளையாட்டால் அதிகரிக்கும் தற்கொலைகள்: பப்ஜி ஆடும் ஏக்கத்தில் திருப்பத்தூர் மாணவன் தற்கொலை..!!!

திருப்பத்தூர்:  திருப்பத்தூர் அருகே பப்ஜி விளையாடும் ஏக்கத்தில் பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குரிசிலாப்பட்டு அடுத்த ஓமக்குட்டம் கொள்ளைகொட்டாய் பகுதியை சேர்ந்த திருமூர்த்தி என்பவரின் மகன் தினேஷ்குமார். இந்த மாணவனே தற்போது தற்கொலை செய்துகொண்ட சிறுவன் ஆவான். இந்த சிறுவன் மிட்டூர் அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த சில மாதங்களாக அப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் பப்ஜி கேம் விளையாடியதை இந்த சிறுவன் பார்த்துள்ளான். இதனையடுத்து தினேஷ்குமார் தனக்கும் செல்போன் வாங்கி தருமாறு பெற்றோர்களிடம் கேட்டுள்ளான்.

விவசாய கூலி தொழிலாளியான பெற்றோர்களால் செல்போன் வாங்கி தரமுடியாத நிலை இருந்துள்ளது. இந்த நிலையில் பப்ஜி விளையாடிக்கொண்டிருந்த சக நண்பர்களுடன் தினேஷ் அமர்ந்துகொண்டு ரசித்ததோடு, விளையாடவும் ஆசைப்பட்டு நண்பர்களிடம் செல்போன் கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து தினேஷ்குமாருக்கு பப்ஜி விளையாட செல்போன் யாரும் தரவில்லை. இதனால் அந்த சிறுவன் பப்ஜி விளையாட முடியவில்லையே என்ற ஏக்கத்தில் வீட்டிற்கு சென்று தாயின் புடவையில் தூக்குமாட்டி தற்கொலை செய்துள்ளான்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள குரிசிலாப்பட்டு போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பிவைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் சென்னையில் ஒரு கல்லூரி மாணவன் ஆன்லைன் விளையாட்டால் பணம் பறிகொடுத்ததை தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டான். கோவையில் ஒரு சிறுவன் அதிக நேரம் ஆன்லைன் கேம் விளையாடியதால் உயிரிழந்துள்ளான். இதேபோல் பல்வேறு இடங்களில் பல பள்ளி மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டால் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: