×

தங்கம் கடத்தல் வழக்கில் பகீர் திருப்பம் இந்தியா - ஐக்கிய அரபு அமீரக நல்லுறவை சீர்குலைக்க திட்டம்: நீதிமன்றத்தில் என்ஐஏ அதிர்ச்சி தகவல்

திருவனந்தபுரம்: தங்கம் கடத்தல் கும்பல் இந்தியா- ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இடையேயான நல்லுறவை சீர்குலைக்க திட்டமிட்டிருந்ததாக நீதிமன்றத்தில் என்ஐஏ தெரிவித்துள்ளது. திருவனந்தபுரம் தங்கம் கடத்தல் வழக்கில் கைதான தங்கராணி சொப்னா மற்றும் சந்தீப் நாயரின் ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது கேஸ் டயரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது என்ஐஏ சிறப்பு வக்கீல் நீதிமன்றத்தில் கூறியதாவது: சொப்னா தூதரகத்தில் செல்வாக்கு மிக்க பொறுப்பில் இருந்ததால் முக்கிய பிரமுகர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்தி கொண்டார். ஊரடங்கு சட்டம் அமலில் இருந்தபோதும் தலைமறைவாக இருக்க முக்கிய பிரமுகர்கள் இவருக்கு உதவியுள்ளனர். இந்தியாவில் இருந்து அவரை தப்பிக்க செய்யவும் அவர்கள் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

2019 முதல் தூதரக பார்சலில் தங்கம் கடத்தியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இந்தியா, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இடையேயான நல்லுறவை சீர்குலைக்கவும் சதித்திட்டம் தீட்டி இருந்தனர். பிடிபட்டால் இருநாடுகளுக்கு இடையேயான நல்லுறவில் விரிசலை ஏற்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும் என்று இவர்கள் தீர்மானித்திருந்தனர். தேச விரோத செயல்களிலும் ஈடுபட்டுள்ளனர். கடத்தல் மூலம் கிடைத்த பணம் பெரும்பாலும் தீவிரவாத செயல்களுக்குத்தான் சென்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

2 அமைச்சர்களுக்கு சிக்கல்: கேரள மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வெளியுறவுத்துறை முன் அனுமதி பெற்றே தூதரகங்களுக்கு செல்ல முடியும். ஆனால் 2 கேரள அமைச்சர்கள் பலமுறை திருவனந்தபுரத்தில் உள்ள  ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு தனிப்பட்ட முறையிலும், அரசு பணி நிமித்தமாகவும் சென்று வந்துள்ளனர். சொப்னாதான் இவர்களை அழைத்து சென்றுள்ளார். மேலும், வெளிநாடு செல்வதற்கான விதிமுறைகளையும் இந்த அமைச்சர்கள் மீறியது,  பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

சொப்னா சொத்துக்களை முடக்க திட்டம்: தங்கம் கடத்தல் வழக்கை சுங்க இலாகா, என்ஐஏ, வருவாய் புலனாய்வுதுறை ஆகிய மூன்று துறைகள் தவிர அமலாக்கத்துறையும் விசாரித்து வருகிறது சொப்னா மற்றும் சந்தீப் நாயரை 10 நாள் காவலில் விசாரிக்க அனுமதிக்க கோரி எர்ணாகுளம் முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது. இதை விசாரித்த நீதிமன்றம் இருவரையும் 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளது.
சொப்னா மற்றும் சந்தீப் நாயரின் சொத்துக்களை முடக்கவும் அமலாக்கத்துறை தீர்மானித்துள்ளது.

* வரி செலுத்தாத சொப்னா
சொப்னா கைதானபோது அவரிடம் இருந்து 8,034 அமெரிக்க டாலர்கள், 711 ஓமன் ரியால், பல்வேறு வங்கிகளில் ரூ.56 லட்சம் முதலீடு செய்ததற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரது லாக்கரில் இருந்து ரூ.1 கோடிக்கும் மேல் பணம், ஒரு கிலோவுக்கும் மேல் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சுமார் ரூ.2 கோடிக்கும் மேல் முதலீடு செய்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் ஐக்கிய அரபு அமீரகத்திலும், கேரள அரசின் ஐடி துறையிலும் உயர் பதவியில் இருந்ததால் லட்சக்கணக்கில் சம்பளம் கிடைத்துள்ளது. ஆனாலும் ஒரு ரூபாய்கூட வருமான வரி செலுத்தவில்லை.

Tags : Pakir ,NIA ,UAE ,India ,court , Gold smuggling case, India - UAE, plot to destabilize, NIA shocking information in court
× RELATED ஸவப்னா தங்கக் கடத்தல் வழக்கில் என்.ஐ.ஏ....