×

பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு அரசியல் சாசன அமர்வுக்கு 34 பேரின் மனுக்கள் மாற்றம்: விரிவாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் பிரிவினருக்கு கூடுதலாக 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டும் என கூறியுள்ள உச்ச நீதிமன்றம், அது தொடர்பான மனுக்களை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை கடந்தாண்டு பிப்ரவரியில் மத்திய அரசு கொண்டு வந்தது. இதை எதிர்த்து, மூத்த வழக்கறிஞர் தன்சீன் பூணவாலா, திமுக.வின் ஆர்.எஸ்.பாரதி, விடுதலை சிறுத்தைகளின் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் உட்பட 34 பேர், உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களில், ‘பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டம், இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது. மேலும், இடஒதுக்கீட்டின் சட்ட அடிப்படைத்தன்மையை மாற்றும் விதமாக இது அமைந்துள்ளது. குறிப்பாக, 1992ன் மண்டல் கமிஷன் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு எதிராக இச்சட்டம் உள்ளது. அதனால், மத்திய அரசின் இந்த சட்டத்தை ரத்து செய்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,’ என்று கூறப்பட்டுள்ளது. இதில், அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, ராமசுப்ரமணியம் அடங்கிய அமர்வு நேற்று புதிய உத்தரவை பிறப்பித்தது. அதில், ‘இந்த மனுக்கள் அத்தனையும் பற்றி விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். எனவே, உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்விற்கு இந்த வழக்குகளை மாற்ற உத்தரவிடப்படுகிறது,’ என்று அறிவித்தனர். இதையடுத்து, இந்த வழக்குகளை விசாரிப்பதற்கான புதிய அரசியல் சாசன அமர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடலாம் என தெரிகிறது.  இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த ஜனவரி 7ம் தேதி நடந்தபோது, ‘பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, அந்தந்த மாநில அரசுகளே முடிவுகளை மேற்கொள்ளலாம்,’ என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது  என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : persons ,Supreme Court ,session , Economy, vulnerable public, 10% reservation constitutional session, 34 petitions changed
× RELATED பதிவு திருமண நடைமுறையில் மாற்றம்