சென்னையில் தொடரும் போதைப் பொருள் வேட்டை பல ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.10 லட்சம் மதிப்பு குட்கா சிக்கியது: 3 பேர் கைது; ஆட்டோ, பைக் பறிமுதல்

சென்னை: சென்னையில் போதைப் பொருளுக்கு எதிராக தொடரும் அதிரடிச் சோதனையில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். வடசென்னை பகுதியில் தொடர்ந்து அதிக அளவில் கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்களும், போதை மருந்துகளும் கடந்த பல ஆண்டுகளாக விற்பனை செய்யப்பட்டு வந்தன. அதிகாரிகளின் ஆசியோடு இவைகள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. ஏற்கனவே குட்கா விற்பனை தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. அதில் பல உயர் அதிகாரிகள் சிக்கியுள்ளனர். ஆனாலும், சென்னையில் குட்கா மற்றும் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் கட்டுப்படுத்தப்படவில்லை.

இதனால் வடசென்னையில் போதைப் பொருட்களை கட்டுப்படுத்த கூடுதல் கமிஷனர் அருண் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினர் வட சென்னை முழுவதும் அதிரடி சோதனை நடத்தி மூட்டை, மூட்டையாக கஞ்சாவை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் தனிப்படை போலீஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மாதவரம் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் புகழேந்தி ஆகியோர்  எர்ணாவூர் அருகே பாரதியார் நகர் பகுதிகளில் நேற்று அதிரடியாக வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை மடக்கி சோதனையிட்டபோது அதில் தடை செய்யப்பட்ட குட்கா இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து ஆட்டோவில் கொடுங்கையூரை சேர்ந்த விபின்குமார் (35) என்பவரை எண்ணூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் கொத்தவால்சாவடி, கேளம்பாக்கம், மாம்பாக்கம் ஆகிய பகுதிகளில் வெளிமாநிலத்தில் இருந்து தடை செய்யப்பட்ட குட்காவை கடத்தி வந்து குடோனில் பதுக்கி வைத்து அதை பாக்கெட்டுகளாக தயார் செய்து எண்ணூர், மாதவரம், மண்ணடி போன்ற பல இடங்களில் இடைத்தரகர்கள் மூலம் பல ஆண்டுகளாக  விற்பனை செய்வது தெரியவந்தது.

இதையடுத்து, விபின்குமார், கேளம்பாக்கத்தைச் சேர்ந்த குளோஜின்னா (45), திருவேற்காடு பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி (40). ஆகியோரை கைது செய்து குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 10 லட்சம் மதிப்புள்ள  ஒரு டன் குட்கா மற்றும் ஒரு ஆட்டோ 2 பைக் வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.  இவர்கள் உயர் அதிகாரிகளுக்கு மாமூல் கொடுத்து விட்டு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனால் இது குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: