கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் அரசு ஊழியர்கள் குடியிருப்புக்கு ‘சீல்’

* கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு

* 7 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை

* பொதுப்பணித்துறை அலுவலகம் வெறிச்சோடியது

சென்னை: கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது கண்டறியப்பட்டுள்ள நிலையில், அரசு ஊழியர்கள் குடியிருப்பு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, 7 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வராமல், அப்பகுதியில் உள்ளவர்கள் தங்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளவும் மாநகராட்சி அறிவுரை வழங்கியுள்ளது. சென்னை சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் அரசு ஊழியர்கள் குடியிருப்புகள் உள்ளது. இதில், பொதுப்பணி, வருவாய், வணிகவரி, கூட்டுறவு, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் தங்களது குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இதில், பொதுப்பணித்துறை உதவியாளர், கண்காணிப்பாளர், உதவி பொறியாளர், உதவி செயற்பொறியாளர், செயற்பொறியாளர் மற்றும் கண்காணிப்பு பொறியாளர், தலைமை பொறியாளர்களுக்கு குடியிருப்புகளில் ஆயிரக்கணக்கோனார் தங்களது குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் பொதுப்பணித்துறை குடியிருப்பு வளாகமான சி2, சி 3 பிளாக் குடியிருப்பு வளாகத்தில் உள்ள பொறியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தை சேர்ந்த பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது அந்த குடியிருப்புகளில் வசிக்கும் பலருக்கு கொரோனா தொற்று தொடர்பாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊழியர்கள் பலரும் தொடர்ந்து பணிக்கு சென்று வருவதால், அவர்களுடன் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சி அடையாறு மண்டல நல அலுவலர் சார்பில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை குடியிருப்பு வளாகம் தாடண்டர் குடியிருப்பு நலச்சங்கம் செயலாளருக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.

அதில், சென்னை மாநகராட்சி 13 மண்டலத்துக்கு உட்பட்ட தாடண்டர் நகர் பகுதி பொதுப்பணித்துறை குடியிருப்பு வளாகமான சி 2, சி 3 பிளாக் குடியிருப்பு கட்டிட வளாகத்தில் வட்டார துணை ஆணையர் (தெற்கு) மண்டல அலுவலர்  கள ஆய்வின் போது கடந்த 14 நாட்களில்  சி 2 மற்றும் சி 3 குடியிருப்பு பகுதிகளில் அதிக கொரோனா தொற்று உள்ளது கண்டறியப்பட்டது. ஆகவே வட்டார துணை ஆணையர் (தெற்கு) அறிவுறுத்தலின் படி தமிழ்நாடு பொதுப்பணித்துறை குடியிருப்பு வளாகமான சி 2 மற்றும் சி 3 பிளாக் முழுவதும் ஆக 4ம் தேதி (நேற்றுமுன்தினம்) முதல் 7 நாட்களுக்குள் இப்பகுதி கொரோனா நோய் கட்டுபடுத்தப்பட்ட பகுதியாக தனிமைப்படுத்தப்படுகிறது.

இந்த நாட்களில் குடியிருப்பு வளாகத்தில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொள்ளவும், வெளியே செல்லாமல் இருக்கவும் வெளியில் இருந்து யாரும் இந்த கட்டிட வளாகத்தின் உள்ளே வராமலிருக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, அந்த கட்டிடங்களில் வசிக்கும் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுப்பணித்துறையில் நடந்து வரும் பல்வேறு திட்ட பணிகளை கண்காணிப்பது மற்றும் அதற்கான அறிக்கை தயார் செய்யும் பணி முடங்கி போய் உள்ளது.

Related Stories: