மது கடத்தியவர்களை விரட்டி பிடித்த ஏட்டு: உயர் அதிகாரிகள் பாராட்டு

அண்ணாநகர்: அண்ணா நகர் காவல் நிலையத்தில் போக்குவரத்து தலைமை காவலராக பணிபுரிபவர் மோகன்குமார் (45). இவர், நேற்று முன்தினம் அண்ணாநகர் சாந்தி காலனி பகுதியில் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, ஒரு பைக்கில் 2 பேர் `நோ என்ட்ரி’ வழியாக வந்தனர். அவர்களை “இவ்வழியே செல்லக்கூடாது” என மோகன்குமார் தடுத்து திருப்பி அனுப்பினார். அவர்கள் மீண்டும் அதே பாதையில் வரவே, மோகன்குமார் அவர்களை பிடிக்க முயற்சித்தார். இதில் இருவரும் தப்பி ஓடினர். தொடர்ந்து அவர்களை விரட்டி சென்று பிடித்தார். பின்னர் அவர்களது பைக்கை சோதனை செய்ததில், அதில் 30 மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.

தொடர்ந்து, அவர்களை அண்ணா நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில், புரசைவாக்கத்தை சேர்ந்த எழிலரசன் (19). சத்தியமூர்த்தி (25) என தெரியவந்தது. மேலும், அவர்கள் கூடுவாஞ்சேரி டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் வாங்கி, தங்களது பகுதியில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக ஒப்புக் கொண்டனர். இதுகுறித்து அண்ணா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போக்குவரத்து பணியின்போது, மதுபாட்டில் கடத்தி வந்த இருவரையும் விரட்டிப் பிடித்த தலைமை காவலர் மோகன்குமாருக்கு கமிஷனர் உள்பட உயர் காவல்துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

Related Stories: