கோவையில் இறந்தது இலங்கை தாதாவா? டி.என்.ஏ. பரிசோதனை நடத்த போலீஸ் முடிவு

கோவை: கோவையில் இறந்தது இலங்கை தாதா அங்கோட லொக்காதானா? என உறுதி செய்ய விரைவில் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இலங்கை போலீசாரால் தேடப்பட்டு வந்தவர் சர்வதேச தாதா அங்கோட லொக்கா (35). கொழும்பு பகுதியை சேர்ந்த இவர் மீது போதை பொருள் கடத்தல், கொலை என பல வழக்குகள் இருக்கின்றன. கடந்த 2 ஆண்டாக அங்கோட லொக்கா தலைமறைவாக இருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையில் உள்ள ஒரு மருத்துவமனையில் கடந்த மாதம் 4ம் தேதி இலங்கையை சேர்ந்த பிரதீப் சிங் என்பவர் இறந்ததாகவும், அவரது ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்ததில் தாதா லொக்காவாக இருக்கலாம் எனவும் தகவல் வெளியானது.

இதையடுத்து, பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் சிவகாமசுந்தரி (37), அவரது நண்பரான ஈரோட்டை சேர்ந்த தியானேஸ்வரன் (33), அங்கோட லொக்காவுடன் வசித்து வந்த அவரது காதலியான இலங்கையை சேர்ந்த அமானி தாஞ்சி (27) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி பிரிவிற்கு மாற்றப்பட்டு 10 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். நேற்று முன்தினம் அங்கோட லொக்கா வசித்த வீட்டில் போலீசார் 5 மணி நேர சோதனை நடத்தினர். இங்கே லொக்காவின் லேப்டாப், செல்போன்கள், சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இவரது இ மெயில், வங்கி கணக்கு, ஆன்லைன் பரிவர்த்தனை விவரங்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். விசாரணைக்கு அமைக்கப்பட்ட 7 தனிப்படை போலீசார் திருப்பூர், மதுரை, திருச்சியில் முகாமிட்டு பல்வேறு விவரங்களை சேகரித்து வருகின்றனர். அங்கோட லொக்காவின் முக்கிய தொடர்பாளர் சிவகாம சுந்தரியின் தந்தை தினகரன் (62) ஆவார். விடுதலைப்புலிகள் அமைப்பின் தீவிர ஆதரவாளரான இவர் மீது ஏற்கனவே வழக்குகள் இருக்கிறது. லொக்கா விவகாரம் வெளியான பின்னர் தினகரனை காணவில்லை. இவரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். இவரின் ஆதரவு மூலமாகவே அங்கோட லொக்கா கோவையில் தங்கியிருந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில் இறந்தது அங்கோட லொக்காதானா? என கண்டறிவதில் போலீசார் தீவிரமாக உள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:

அங்கோட லொக்காவின் உடற்கூறு பாகங்கள் கடந்த மாதம் 5ம் தேதி அரசு மருத்துவமனையில் பெறப்பட்டுள்ளது. இதை வைத்து டி.என்.ஏ. பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இலங்கையில் இவரின் தந்தை, தாய், சகோதர, சகோதரிகள் இருக்கிறார்கள். உடற்கூறு பாகங்களை சோதனை நடத்தினால் இறந்தது யார்? என உறுதி செய்ய முடியும். இந்த வழக்கின் முக்கிய ஆதாரமே இந்த சோதனைதான். லொக்கா இறந்த பின்னர் உடல் தகனம் செய்தபோது அவரது அக்காளுக்கு வீடியோ கால் மூலமாக சிவகாமசுந்தரி தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது பதிவான காட்சிகளை சிவகாமசுந்தரியின் செல்போன் பதிவுகளில் இருந்து பெற முயற்சி செய்து வருகிறோம். அமானிதாஞ்சியின் பின்னணி குறித்த விவரங்கள் முழுமையாக தெரியவில்லை. காவலில் எடுத்து விசாரணையை உடனடியாக துவக்க தேவையான முயற்சி செய்து வருகிறோம். இவ்வாறு போலீசார் கூறினார்கள்.

* கூட்டாளிகளை பிடிக்க திட்டம்

அங்கோட லொக்காவின் நெருங்கிய கூட்டாளிகள் சிலர் தமிழகத்தில் அடைக்கலமாகியிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. அதனால், இலங்கை தூதரகம் மூலமாக லொக்காவின் குற்ற வழக்குகள், உறவினர்கள், கூட்டாளிகள் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தகவல் சேகரித்து வருகின்றனர்.

Related Stories: