இ-பாஸ் மோசடியில் வேலூர் வாலிபரை தொடர்ந்து முக்கிய குற்றவாளிகள் 2 பேர் திருச்சியில் கைது: அரசு அதிகாரிகளுக்கு தொடர்பா? போலீஸ் தீவிர விசாரணை

வேலூர்: இ-பாஸ் மோசடியில் வேலூர் வாலிபர் கைதை தொடர்ந்து, திருச்சியை சேர்ந்த முக்கிய குற்றவாளிகளான 2 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கொரோனா ஊரடங்கையொட்டி தமிழகத்தில் வரும் 31ம் தேதி வரை மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இ-பாஸ் கட்டாயம் என்று அரசு அறிவித்தது. இதனால் இ-பாஸ் கேட்டு பலரும் விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால் பல இடங்களில் பணத்தை வாங்கிக்கொண்டு போலி இ-பாஸ் விநியோகம் செய்யப்படுவதாக புகார்கள் வந்தன. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஒருவர் வாட்ஸ் அப் குழு உருவாக்கி 2 மணி நேரத்தில் இந்தியாவில் அனைத்து இடங்களுக்கு செல்லவும் இ-பாஸ் தரப்படும் என்று விளம்பரம் செய்துள்ளார்.

இதுகுறித்து வேலூர் கலெக்டர் அலுவலகத்துக்கும், எஸ்பி அலுவலகத்துக்கும் நேற்று முன்தினம் புகார்கள் சென்றது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி, இ-பாஸ் பெற்று தரப்படும் என்று விளம்பரம் செய்த வேலூர் பெரிய அல்லாபுரம் நாகலிங்கேஸ்வர் கோயில் தெருவைச் சேர்ந்த 18 வயது நபரை கைது செய்து, நடத்திய விசாரணையில், 350 பேருக்கு இ-பாஸ் வழங்கியது அம்பலமாகியுள்ளது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியை பிடிக்க வேலூர் தனிப்படை போலீசார் திருச்சிக்கு விரைந்தனர். இதையடுத்து நேற்று மாலை திருச்சி முத்தரசநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின் (26), திருச்சி கொட்டாபட்டு பகுதியைச் சேர்ந்த வடிவேல் (27) ஆகிய இருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:

திருச்சியில் உள்ள இ-பாஸ் வழங்கும் புரோக்கர் கும்பலிடம் கிடைத்த தொடர்பை பயன்படுத்தி வேலூர் வாலிபர் பணம் வசூலித்து கொடுத்தது தெரியவந்தது. அவரது வீட்டில் இருந்த லேப்டாப், ஆன்ட்ராய்டு போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து வாட்ஸ் அப் குழுவில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இ-பாஸ் வழங்குவதில் திருச்சியைச் சேர்ந்த வடிவேல், ஸ்டாலின் ஆகியோர் முக்கிய மூளையாக செயல்பட்டுள்ளனர். வடிவேலுவுடன் தொடர்பில் உள்ள வேலூரைச் சேர்ந்த புரோக்கர்கள் மற்றும் கைதான வாலிபரின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்து வருகிறோம். அத்துடன் இ-பாஸ் மையத்தில் உள்ள அரசு உயர் அதிகாரிகள் யாரேனும், புரோக்கர்களுடன் தொடர்பில் உள்ளார்களா? என்று ரகசிய விசாரணை நடந்து வருகிறது.

Related Stories: