டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன? மாநகராட்சிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சென்னை: டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் 4 வாரத்தில் பதிலளிக்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சமூக ஆர்வலர் ரோஹன் நாகர் என்பவர் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், கடந்த ஜூலை மாதம் சென்னையில் 5 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில், அதே அறிகுறிகளுடன் கூடிய மலேரியா மற்றும் டெங்கு சாய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் காலி மனைகளில் மழை நீர் மற்றும் கழிவு நீர் சேராமல் தடுக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த 2019 அக்டோபர் வரை 4779 பாதிப்புகளும் 4 மரணமும் ஏற்பட்டுள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. மேலும் பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தவறினால் அது கொசு உற்பத்தியை அதிகரித்து மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். சென்னை புரசைவாக்கம் பகுதியில் குப்பைகளை அகற்ற மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. அதனால், கொசு உற்பத்தியை தடுக்க 3 மாதத்திற்கு ஒருமுறை முழுமையாக குப்பைகளை அகற்ற உத்தரவிட வேண்டும்.

மழைக்காலம் தொடங்குவதற்கு முன் தண்ணீர் தேங்கும் காலி இடங்களை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். மனுவை  மாநில மனித உரிமை ஆணைய பொறுப்பு தலைவர் துரை.ஜெயச்சந்திரன் விசாரித்தார். அப்போது சென்னையில் டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையர் 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

Related Stories: