செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றங்களில் 3 நீதிபதிகள் உள்பட 30 பேருக்கு கொரோனா

செங்கல்பட்டு: செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தாம்பரம், மதுராந்தகம், ஸ்ரீபெரும்புதூர், ஆலந்தூர், திருக்கழுக்குன்றம், உத்திரமேரூர் ஆகிய பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களில் 400க்கும் மேற்பட்ட ஊழியர்கள், 30 மாவட்ட நீதிபதிகள், குற்றவியல் நடுவர் நீதிபதிகள் பணியாற்றுகின்றனர். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் நீதிபதி, தாம்பரம், மதுராந்தகம் ஆகிய நீதிமன்றங்களை சேர்ந்த 2 நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் 30 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. அவர்கள், அனைவரும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே இருங்காட்டுகோட்டையில் உள்ள தீயணைப்பு வீரர்கள், ஊழியர்கள் என 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சிப்காட் அலுவலகத்தில் 2 பேருக்கு தொற்று உறுதியானது. அவர்கள் பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். தமிழகத்தில் வேகமாக பரவிவரும் கொரோனா, மணிமங்கலம் கிராமத்திலும் அதிகரித்துள்ளது. மணிமங்கலம் போலீசார், முன்னாள் துணை தலைவர் உள்பட ஏராளமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். மேலும் பலருக்கு காய்ச்சல், இருமல், சளி ஆகிய அறிகுறிகளுடன் உள்ளனர். இதில் பெரும்பாலானோர் முதியோர்கள். எனவே, மணிமங்கலம் கிராமத்தில் கொரோனா சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடத்த வேண்டும் என்றனர்.

செய்யூர்: செய்யூர் தாலுகாவில் 57 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று மேலும் 5 பேருக்கு தொற்று உறுதியானது. இதையொட்டி, பாதிப்பு எண்ணிக்கை 62 உயர்ந்துள்ளது. அதேபோல், செய்யூரை சேர்ந்த 40 வயதுள்ள ஒருவருக்கும், சூனாம்பேடு அருகே இல்லீடு கிராமத்தை 28 வயது வாலிபருக்கும் கொரோனா உறுதியானது. வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியத்தின் 61 ஊராட்சிகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நடமாடும் வாகன பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. இதையொட்டி, முதல்கட்டமாக வாலாஜாபாத் ஒன்றியத்தில் அய்யம்பேட்டை, முத்தியால்பேட்டை, ஏகனாம்பேட்டை, நாயக்கன்பேட்டை ஆகிய ஊராட்சிகளில் முகாம் நடந்தது.இதில், அனைத்து கிராம மக்களும் பரிசோதனை செய்ய வேண்டும் என என வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதேபோல் பேரூராட்சியின் 15 வார்டுகளில் நடந்த முகாமில் அனைத்து பகுதிகளிலும் நடமாடும் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியம் ஆலத்தூர் சிட்கோ தொழிற் பேட்டையில் உள்ள தனியார் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் 30 தொழிலாளர்களுக்கு நேற்று கொரோனா உறுதியானது. இதையடுத்து அந்த தொழிற்சாலை மூடப்பட்டது. அதேபோல், நேற்று ஒரே நாளில் கேளம்பாக்கத்தில் 8, சிறுங்குன்றம், தையூரில் தலா 4, படூரில் 3, சிறுதாவூர், போலச்சேரி, கண்டிகை, மேலக்கோட்டையூர், பொன்மார், பெருந்தண்டலம் கிராமங்களில் தலா 2, இள்ளலூர், பையனூர், பனங்காட்டுப்பாக்கம், புதுப்பாக்கம், மாம்பாக்கம், கோவளம் ஆகிய கிராமங்களில் தலா 1, திருப்போரூர் பேரூராட்சி திருப்போரூர், கண்ணகப்பட்டு, காலவாக்கம் கிராமங்களில் 5 பேருக்கு தொற்று ஏற்பட்டது. காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 322 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 10,625 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு இதுவரை 126 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

* தலைமை எழுத்தர் பாதிப்பு

பழைய மாமல்லபுரம் சாலையில் நாவலூர், சிறுசேரி, தாழம்பூர், புதுப்பாக்கம், படூர், கேளம்பாக்கம், தையூர், திருப்போரூர் மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் கானத்தூர், முட்டுக்காடு, கோவளம் உள்பட 70 கிராமங்களின் பத்திரப்பதிவுகள் திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடக்கிறது. கடந்த 2 மாதங்களாக குறைந்த எண்ணிக்கையில் பத்திரப்பதிவுகள் நடக்கின்றன. இங்குள்ள தலைமை எழுத்தருக்கு, நேற்று முன்தினம் திடீர் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர், கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில், அவருக்கு கொரோனா உறுதியானது. இதை தொடர்ந்து திருப்போரூர் சார்பதிவகம் நேற்று திறக்கப்பட்டது. ஆனால், பொதுமக்களை அனுமதிக்கவில்லை.தொடர்ந்து, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கிருமி நாசினி, பிளீச்சிங் பவுடர் தெளித்த பிறகு, மாவட்ட பதிவாளரிடம் அனுமதி பெற்று பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். மேலும், அத்தியாவசிய ஆவணங்கள் மட்டும் பதிவு செய்யப்பட்டன.

& பிடிஓ அலுவலக ஊழியர்கள் ஓட்டம்

வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். இந்த அலுவலகத்தின் கீழ் 61 ஊராட்சிககளை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள், பல்வேறு பணிகளுக்காக தினமும் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், வழக்கம்போல் நேற்று காலை அனைத்து ஊழியர்களும் பணிக்கு வந்தனர். அப்போது, அங்கு பணியாற்றும் ஒரு ஊழியருக்கு கொரோனா தோற்று உறுதியானதாக செல்போனில் தகவல் வந்தது. இதையடுத்து அவர், அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.இந்த தகவல் அனைத்து ஊழியர்களுக்கும் தெரிந்தது இதனையடுத்து, ஊழியர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி நின்றனர். பின்னா், வட்டார வளர்ச்சி அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளித்ததை தொடர்ந்து, மீண்டும் பணியை துவங்கினர்.

Related Stories: