×

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுற்றுலா வேன் உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு: சுற்றுலா வேன் உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட அனைத்து சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கம் சார்பில், சுற்றுலா வாகன ஓட்டுனர்களுக்கு 6 மாத உதவி தொகையாக மாதம் ரூ.5000 வழங்குவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க நிர்வாகிகள் குமார், சதீஷ்ராஜா, சட்ட ஆலோசகர் புதிய ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், தமிழ்நாடு அனைத்து சுற்றுலா வாகன உரிமையாளர்கள், ஓட்டுனர்களுக்கு 6 மாதத்துக்கு உதவி தொகையாக மாதம் ரூ.5000 வழங்க வேண்டும்.

ஊரடங்கு காலத்தில் சாலை வரி ரத்து செய்ய வேண்டும். வாகன கடனுக்கான வட்டியை ரத்து செய்ய வேண்டும். வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு அரசு வங்கிகள் மூலம் கடனுதவி வழங்க வேண்டும். மத்திய அரசு கோவிட் 19 அறிவித்துள்ளபடியால் இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் இருந்து பேரிடர் இழப்பீடு பெற்றுதர வேண்டும். டீசல், விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். ஊரடங்கு காலத்தில் காலாவதியான வாகன காப்பீடு, 6 மாத காலத்துக்கு நீடித்து தரவேண்டும். இ பாஸ் நடைமுறையை ரத்து செய்யவேண்டும். அனைத்து வாகனத்தின் தகுதி சான்று புதுப்பிக்க எளிய நடைமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
பின்னர், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம் வரை பேரணியாக சென்று, கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

Tags : Tourist van owners , Various demand, tourist van owners, demonstration
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி