தேசிய சுற்றுச்சூழல் பாதிப்பு ஆய்வு திருத்த அறிவிக்கை சர்ச்சை பொதுமக்கள் கருத்து கூறும் அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்: கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பெங்களூரு: ‘தேசிய சுற்றுச்சூழல் பாதிப்பு திருத்த அறிவிக்கை 2020’ பற்றி மக்கள் கருத்து கூறுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கும்படி மத்திய அரசுக்கு கர்நாடக  உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ‘தேசிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம்- 1996’-ல் மத்திய அரசு முக்கிய திருத்தங்களை செய்து, 2006ல் புதிய சட்டத்தை வெளியிட்டது. இதன் மூலம், இந்தியாவில் செயல்படுத்தும் அனைத்து விதமான திட்டங்கள், தொழிற்சாலைகள் உட்பட எல்லாவற்றுக்கும் சுற்றுச்சூழல் பாதிப்பு அறிவிக்கை தாக்கல் செய்வது கட்டாயமாக்கப்பட்டது.

தற்போது மத்தியில் ஆட்சி நடத்தி வரும் பாஜ அரசு, இதில் ஓசைப்படாமல் பல்வேறு சர்ச்சைக்குரிய திருத்தங்களை செய்துள்ளது. ‘தேசிய சுற்றுச்சூழல் பாதிப்பு திருத்த அறிவிக்கை - 2020’ என்ற பெயரிலான அதற்கு, மத்திய அமைச்சரவை கடந்த வாரம் திடீரென ஒப்புதல் அளித்தது. இதன்படி, இந்தியாவில் இனிமேல் அமல்படுத்தப்படும் எந்த திட்டத்துக்கும் முன்கூட்டியே சுற்றுச்சூழல் பாதிப்பு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயமில்லை. திட்டங்கள் பற்றி மக்களிடம் கருத்து கேட்கவும் தேவையில்லை. இதற்கு தேசிய அளவில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த அறிவிக்கை பற்றி மக்கள் தங்கள் கருத்துக்களை வரும் 11ம் தேதிக்குள் தெரிவிக்கும்படி கெடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அறிவிக்கையை தமிழ் உட்பட 22 பிராந்திய மொழிகளில் வெளியிடவும் உத்தரவிடப்பட்டது. ஆனால், இதுவரை 3 மொழிகளில் மட்டுமே இது மொழி பெயர்க்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், மக்கள் கருத்து கேட்பதற்கான அவகாசம் முடிய 5 நாட்களே உள்ள நிலையில், இந்த காலக்கெடுவை நீட்டிக்கக் கோரி பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர்,  கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்தார். இது, தலைமை நீதிபதி அபய் சீனிவாஸ் ஓகா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல். ‘‘மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் கொண்டுவரும் தேசிய சுற்றுச்சூழல் பாதிப்பு ஆய்வு திருத்தம் சட்டம் தொடர்பான அறிவிப்பு கடந்த மார்ச் 23ம்  தேதி வெளியிடப்பட்டது. இந்த திருத்தம் தொடர்பாக பொதுமக்கள் தங்கள் கருத்துகளை ஆகஸ்ட் 11ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்ட மறுநாளில் இருந்து கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஒன்றரை மாதங்களுக்கு பின் ஊரடங்கில் ஓரளவுக்கு தளர்வு செய்யப்பட்டது. கடந்த நான்கு மாதங்களாக ஊரடங்கு அமலில் இருக்கும்போது, எப்படி பொதுமக்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்ய முடியும்?  மேலும், சட்ட திருத்தம் தொடர்பான விவரம் இந்தி, ஆங்கில மொழிகளில் மட்டுமே உள்ளது. மாநில மொழிகளில் வழங்கவில்லை. இந்தி, ஆங்கில மொழி தெரியாதவர்கள் எப்படி சட்டத்தில் உள்ள குறைகளை பதிவு செய்ய முடியும்?’’ என்று வாதிட்டார்.

அப்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான வக்கீல் சிவகுமார், ‘‘தேசிய சுற்றுச்சூழல் ஆய்வு சட்ட திருத்தம் தொடர்பான விவரங்களை  அனைத்து மாநில மொழிகளிலும் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மேலும், பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்கவும் மத்திய அரசு யோசித்து வருகிறது,’’ என்று தெரிவித்தார். அதையேற்று கொண்ட நீதிபதிகள், ‘‘மக்கள் கருத்து தெரிவிக்கும் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும். மாநில மொழிகளில் அறிவிக்கை விவரத்தை வெளியிட வேண்டும்,’’ என்று உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 7ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். சுற்றுச்சூழல் பாதிப்பு ஆய்வு திருத்த சட்டம் தொடர்பான அறிவிக்கை, கடந்த மார்ச் 23ம்  தேதி  வெளியிடப்பட்டது. மறுநாளில் இருந்து கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடந்த 4 மாதங்களாக ஊரடங்கு அமலில் இருக்கும்போது, மக்கள் எப்படி தங்கள் கருத்துகளை பதிவு செய்ய முடியும்?’’ .

Related Stories: