ராஜஸ்தான் சபாநாயகருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஆளும் காங்கிரசில் பகுஜன் சமாஜ் எம்எல்ஏ.க்கள் 6 பேர் இணைந்தது பற்றி விளக்கம் அளிக்கும்படி, சபாநாயகருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ராஜஸ்தான் மாநில அரசில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் மோதல் ஏற்பட்டதால், சச்சின் தனது ஆதரவு எம்எல்ஏ.க்கள் 18 பேருடன் கட்சியில் இருந்து வெளியேறி விட்டார். அவர்கள் பாஜ.வுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. இதனால், கெலாட் அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கெலாட் அரசுக்கு மேலும் சிக்கல் அளிக்கும் வகையில், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி புதிய பிரச்னையை கிளப்பி இருக்கிறார்.

கெலாட் ஆட்சி அமைத்தபோது, இம்மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் வெற்றி பெற்ற 6 எம்எல்ஏ.க்களும் கூண்டோடு காங்கிரசில் இணைந்தனர். இப்போது, இவர்கள் 6 பேரும் காங்கிரசில் சேர்ந்ததை எதிர்த்து, பாஜ எம்எல்ஏ மதன் தில்வாரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய செயலாளர் சதீஷ் மிஸ்ராவும் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை நேற்று விசாரித்த உயர் நீதிமன்றம், இது தொடர்பாக  வரும் 11ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படி ராஜஸ்தான் சபாநாயகர் சி.பி.ஜோஷிக்கு உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியது.

Related Stories: