கொரோனா கதியில் இருந்து மீண்டதா? இன்னமும் திணறுகிறது அமெரிக்கா: டிரம்ப் மீது மக்கள் கடுப்பு

நியூயார்க்: மற்ற நாடுகளை விட அமெரிக்கா கொரோனா ஒழிப்பில் வெற்றி கண்டு கொண்டிருக்கிறது என்று அதிபர் டிரம்ப் என்னதான் சொன்னாலும், உண்மையில் நிலைமை வேறாகத்தான் இருக்கிறது. அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் கொரோனா பரவியுள்ளது என்பதுதான் உண்மை. சில மாநிலங்களில் குறைந்து கொண்டிருக்கிறது. அரசு அவ்வப்போது தளர்த்தியதன் விளைவாக மீண்டும் ஏறிக்கொண்டிருக்கிறது. அதுபோல, கலிபோர்னியா போன்ற மாநிலங்களில் தொடர்ந்து குறைய ஆரம்பித்துவிட்டது. காரணம், அங்கு மக்கள் பாடம் கற்றுக்கொண்டு விட்டனர்.

மற்ற மாநிலங்களில் தொடர்ந்து ஏறியவண்ணம், அடங்க மறுக்கிறது கொரோனா வைரஸ். டெக்சாஸ்,கனக்டிகட், அரிசோனா போன்ற மாநிலங்களில் ஆங்காங்கு ஏறிய வண்ணம் உள்ளது. சில இடங்களில் அறவே இல்லை என்பதை புள்ளி விவரங்கள் காட்டுகிறது. நாங்கள் 6 கோடி பேருக்கு பரிசோதனை செய்து விட்டோம்; மற்ற நாடுகள் ஏன் சீனா கூட இந்த அளவை நெருங்கவில்லை என்று டிரம்ப் சொன்னாலும், பரிசோதனை உறுதித்தன்மை மீது பலருக்கும் நம்பிக்கை இல்லை. காரணம், பரிசோதனையில் நெகட்டிவ் என்று சொல்லப்பட்ட இடங்களில் 24 மணி நேரத்தில் கொரோனா பரவியுள்ளது சுட்டிக்காட்டப்பட்டது.

அரிசோனா: இந்த மாநிலத்தில் மார்ச் 1 ம் தேதி பொது ஊரடங்கு  பிறப்பித்தார் கவர்னர் டக் டியூகே; ஆரம்பத்தில் 500 வரை ஏறிய கொரோனா பாதிப்பு, ஏப்ரலில் 2000 ஆயிரத்தை எட்டியது. மே 15 ம் தேதி ஊரடங்கை நீக்கினார். அப்போது மக்கள் வழக்கம் போல வெளியில் நடமாடியதால் மீண்டும் ஏறியது பாதிப்பு. கடந்த மாத இறுதி வரை 4000ஐ எட்டிய பாதிப்பு, இப்போது குறைய ஆரம்பித்து விட்டது.

கலிபோர்னியா: இங்கு தான் அதிக அளவில் முதலில் பரவியது  கொரோனா; எதிர்கட்சி ஜனநாயக கட்சியை சேர்ந்த கவர்னர் காவின் நியூசம் எப்படியோ சமாளிக்கட்டும் என்று விட்டு விட்டார் குடியரசு கட்சியை சேர்ந்த அதிபர் டிரம்ப். மே மாதம் ஊரடங்கு நீக்கப்பட்டதும் ஏறத்துவங்கியது கொரோனா. இப்போது 10 ஆயிரத்தை தாண்டி விட்டது. பார்கள், ஓட்டல்கள் தவிர எல்லாம் திறக்கப்பட்டு விட்டன.

புளோரிடா: கலிபோர்னியா போலவே இங்கும் அதிக பாதிப்பு. ஆளும் குடியரசு கட்சி கவர்னர் ரான் டிசான்டீஸ், மற்றவர்கள் போல மே மாதம் ஊரடங்கை திறந்தார். விளைவு 5 ஆயிரத்தில் இருந்து இரு மடங்காகிவிட்டது பாதிப்பு. இப்போதும் பரவியபடி உள்ளது.

மிச்சிகன்: இங்கு 5 ஆயிரம் வரை பாதிப்பு உள்ளது. இங்கு ஜனநாயக கட்சி கவர்னர் க்ரெட்சன் விட்மர், ஜூனில் எல்லாவற்றையும் திறந்தார். பொழுதுபோக்கு, ஓட்டல்கள், பார்கள் மட்டும் மூடப்பட்டுள்ளன.

டெக்சாஸ்: மார்ச் மாதத்தில் இருந்தே எல்லாம் திறந்து இருந்த மாநிலங்களில் முக்கியமானது டெக்சாஸ். ஆனால், இப்போது கலிபோர்னியாவை அடுத்து அதிக பாதிப்பை கண்டு வருகிறது. 10 ஆயிரத்தை தாண்டி போய்க்கொண்டிருக்கிறது. இப்போது பார்கள், ஓட்டல்களுக்கு மட்டும் தடை உள்ளது. கவர்னர் கிரேக் அபாட், மே 1 ம் தேதியே எல்லாவற்றையும் திறந்ததன் விளைவு இது.

இப்படி பல மாநிலங்களில் இன்னமும் கொரோனா பரவிக்கொண்டு தான் இருக்கிறது. ஒர்க் ப்ரம்  ஹோம் முறையில் தான் சாப்ட்வேர் ஊழியர்கள் வேலை செய்கின்றனர். பள்ளிகள் திறக்கப்படவில்லை. எல்லாமே ஆன்லைன் வகுப்புகள் தான். குழந்தைகள் கிரெச்கள் திறக்கப்பட்டுள்ளன. கொலராடோ, நவாடா,நியூ மெக்சிகோ போன்ற மாநிலங்களில் தொடர்ந்து சரிவு நிலையில் தான்  கொரோனா பாதிப்பு உள்ளது. இருந்தாலும், மக்கள் புரிந்து நடந்து கொள்வதை பொறுத்து தான் பரவுவது உள்ளது. இதனால், கொரோனாவை ஒழித்து விட்டதாக அமெரிக்கா கூற முடியாது.  தொடர்ந்து திணறிக்கொண்டு தான் இருக்கிறது. மக்களுக்கு அரசு மீது அதிருப்தி அதிகரித்து விட்டது.

இப்போதைய நிலை என்ன?

* அமெரிக்காவில் நேற்று வரை கொரோனா பாதிப்பு 50 லட்சத்தை எட்டியது.

* இறப்பு ஒரு லட்சத்து 60 ஆயிரம்.

* இதுவரை 24 லட்சம் பேர் மீண்டுள்ளனர்.

* பில்கேட்ஸ் ஆவேசம்

மைக்ரோசாப்ட் தலைவர் பில்கேட்ஸ் அதிருப்தியை தெரிவித்ததில் முக்கியமானவர். ‘அமெரிக்காவில் செய்யப்பட்ட சோதனைகள் எல்லாம் சரியானதல்ல; 24 மணி நேரத்தில் மீண்டும் பாதிப்பு வருவதை தடுக்க முடியவில்லை; நானாக இருந்தால் இந்த பரிசோதனை முறையை அறவே நிறுத்தியிருப்பேன்’என்று கூறியுள்ளார்.

* டிரம்ப் 22 முறை சொன்னதென்ன?

அதிபர் டிரம்ப் ஒவ்வொரு முறையும் கொரோனா ஒழிந்து கொண்டிருக்கிறது. அறவே போய் விடும் என்று இதுவரை 22 முறை சொல்லி விட்டார். ஆனால், இன்னமும் தொடர்கிறது பாதிப்பு. இந்த வகையில்  அவர் மீது மக்களுக்கு அதிருப்தி தான்.

Related Stories: