பீகார் அரசின் பரிந்துரை ஏற்பு சுஷாந்த் வழக்கை சிபிஐ விசாரிக்கும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் பீகார் அரசின் பரிந்துரையை ஏற்று, சிபிஐ விசாரணை நடத்த ஒப்புதல் அளிப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள அவரது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு பின்னணியில் பாலிவுட்டில் நிலவும் வாரிசு கலாசார ஆதிக்கம் இருப்பதாகவும், இதனால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாகவே, அவர் தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, சுஷாந்தின் தந்தை கிருஷ்ணா கிஷோர் சிங், பாலிவுட் நடிகையும் சுஷாந்தின் காதலியுமான ரியா சக்ரவர்த்ததி மீது சந்தேகம் இருப்பதாகவும், மகனின் பல கோடிகளை சுருட்டி விட்டதாகவும் புகார் செய்தார்.

சுஷாந்த் சிங் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால், மகாராஷ்டிரா அரசு அதற்கு தடையாக இருந்து வந்த நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரிப்பதற்கு ஒப்புதல் அளிக்கும்படி மத்திய அரசை நேற்று முன்தினம் கேட்டுக் கொண்டது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் அது வழக்கு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ரிஷிகேஷ் ராய் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, சுஷாந்த் தற்கொலை பற்றி சிபிஐ விசாரணை நடத்தும்படி பீகார் அரசு செய்துள்ள  பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டதாக கூறினார்.

Related Stories: