×

தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரிப்பு சவரன் ரூ.43 ஆயிரத்தை நெருங்கியது

* ஒரே நாளில் ரூ.976 அதிகரிப்பு
* விரைவில் ரூ.50,000ஐ தொட வாய்ப்பு
* நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி

சென்னை: தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து சவரன் 43 ஆயிரத்தை நெருங்கியது. விரைவில் ரூ.50 ஆயிரத்தை தொடும் என்று நகை வியாபாரிகள் கூறியுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். பொருளாதாரமே நிலை குலைந்து இருக்கும் சூழ்நிலையிலும் தங்கம் விலை மட்டும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இது திருமணம் உள்ளிட்ட விசேஷங்களுக்கு சிறுக, சிறுக பணம் சேர்த்து நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 20ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.37,616க்கு விற்கப்பட்டது.

அதன் பிறகு தங்கம் விலை குறையாமல் தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. தொடர்ச்சியாக 15வது நாளாக நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.5202க்கும், சவரன் ரூ.41616க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை 16வது நாளாக தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அதாவது கிராமுக்கு ரூ.99 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5301க்கும், சவரனுக்கு ரூ.792 அதிகரித்து ஒரு சவரன் ரூ.42,408க்கும் விற்கப்பட்டது. மாலை நேரம் முடிவில் மேலும் தங்கம் விலை அதிகரித்தது. அதாவது நேற்று முன்தினம் விலையை விட கிராமுக்கு ரூ122 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,324க்கும், சவரனுக்கு ரூ.976 அதிகரித்து சவரன் ரூ.42,592க்கும் விற்கப்பட்டது.

இது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்சம் என்ற சாதனையை படைத்தது. தற்போது தங்கம் விலை ரூ.43 ஆயிரத்தை நெருங்கியுள்ளது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் விரைவில் சவரன் ரூ.50 ஆயிரத்தை தொட வாய்ப்பு உள்ளதாக நகை வியாபாரிகள் கூறியுள்ளனர். அது மட்டுமல்லாமல் தொடர்ச்சியாக கடந்த 16 நாட்களில் சவரன் ரூ.4,976 அளவுக்கு தங்கம் விலை உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தங்கம் விலை தொடர் உயர்வு நகை வாங்குவோரை கலக்கமடைய செய்தது மட்டுமல்லாமல் ஒருவித பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில், இன்னும் விலை அதிகரிக்கும் என்று நிறைய பேர் தங்கத்தை வாங்க வருகின்றனர். இதனால் வழக்கம்போல் கடைகளில் வியாபாரம் நடைபெறுவதாகவும் நகை வியாபாரிகள் கூறியுள்ளனர். தங்கம் விலை உயர்ந்து வரும் அதே வேகத்தில் வெள்ளி விலையும் அதிகரித்து வருகிறது நகை வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Gold price, jet speed, increase, shaving Rs.43 thousand
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...