×

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அடிக்கல் நாட்டினார் மோடி: வேத மந்திரங்கள் முழங்க பூமி பூஜை

அயோத்தி: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜையில் நேற்று பங்கேற்ற பிரதமர் மோடி, வேத மந்திரங்கள் முழங்க கோயிலுக்கான அடிக்கல் நாட்டினார். பின்னர் நடந்த விழாவில் பேசிய அவர், ‘‘இந்த கோயிலுக்காக நூற்றாண்டு காலம் காத்திருந்தது முடிவுக்கு வந்துள்ளது,’’ என்றார். உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பர் 9ம் தேதி அனுமதி வழங்கியது. அதன் உத்தரவுப்படி, கோயில் கட்டுவதற்காக அரசியல் சார்பற்ற ‘ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா’ என்ற அறக்கட்டளை அமைக்கப்பட்டது. இதன் சார்பில், கோயில் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. ராம ஜென்ம பூமியில் 67 ஏக்கரில் 10 ஏக்கர் பரப்பளவில் 5 மண்டபங்கள், ராஜ கோபுரம் என நாகரா கட்டிட பணி கலையில் ராமர் கோயில் பிரமாண்டமாக கட்ட திட்டம் வகுக்கப்பட்டது.

இதையடுத்து, கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்க டெல்லியில் இருந்து ஹெலிகாப்டரில் அயோத்தி வந்த பிரதமர் மோடியை உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார். கொரோனா பாதிப்பால், சாதுக்கள், ராமர் கோயில் கட்டுவதற்காக 30 ஆண்டாக போராடியவர்கள் என 175 பேருக்கு மட்டுமே அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்தது. பாஜ மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் வீடியோ கான்பரன்சிங் மூலம் விழாவில் பங்கேற்றனர்.

அடிக்கல் நாட்டு விழாவுக்காக அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. அனைத்து வீடுகள், கடைகள் மஞ்சள், சிவப்பு வண்ணத்தில் ஜொலித்தன. முக்கிய சாலைகளில் மரிக்கொழுந்து பூக்கள் தோரணத்துடன் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்கப்பட்டனர். ராமர் கோயில் மாதிரிகள் வரையப்பட்டு, குழந்தை ராமரின் படங்கள் சுவர்களில் வரையப்பட்டிருந்தன. ராம ஜென்ம பூமிக்கு செல்லும் முன்பாக பிரதமர் மோடியும், ஆதித்யாநாத்தும் அனுமன் கர்கி கோயிலுக்கு சென்று அனுமனிடம் ஆசீர்வாதம் பெற்று திரும்பினர்.

பின்னர், ராம ஜென்ம பூமியில் பூமி பூஜை நடக்கும் மேடைக்கு பிரதமர் வந்தார். அவருடன் ஆதித்யநாத், உபி ஆளுநர் ஆனந்தி பென் படேல், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், மகந்த் நிருத்திய கோபால் தாஸ் ஆகியோர் மட்டுமே பங்கேற்றனர். அனைவரும் முகக்கவசத்துடன் சமூக இடைவெளி விட்டு அமர்ந்திருந்தனர். சிவப்பு நிறத்தில் அலங்கரிக்கப்பட்ட மேடையில் அடிக்கல் நாட்டும் இடத்தில் வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க பூஜையை நடத்தினர். பின்னர், வேதமந்திரங்கள் முழங்க, கோயில் கட்டுவதற்கான அடிக்கல்லை பிரதமர் மோடி நாட்டினார். அப்போது, அரங்கில் இருந்த அனைவரும் ‘பாரத் மாதா கி ஜே’, ஜெய் ராம்’ என விண் அதிர கோஷமிட்டனர்.

இந்த பூமி பூஜை மந்திரங்கள் நகரமெங்கும் ஒலிக்கும் வகையில் ஒலிபெருக்கிகள் அமைக்கப்பட்டிருந்தன. பல இடங்களில் பஜனைகள் நடைபெற்றன. நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் டிவி, இணையதளங்கள் மூலமாக பூமி பூஜையை நேரடியாக கண்டுகளித்தனர். அமெரிக்காவில் வாழும் இந்தியர்களும் பூமி பூஜை நடந்த சமயத்தில் வீடுகளில் ராமரை பூஜித்து வழிபட்டனர். அங்குள்ள பல இந்து கோயில்களில் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியா
மட்டுமின்றி அமெரிக்காவிலும் பெரிய டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டு பூமி பூஜை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. பூமி பூஜையைத் தொடர்ந்து, ராமர் கோயில் கட்டும் பணிகள் உடனடியாக தொடங்கப்பட உள்ளன. இதன் மூலம், மத்தியில் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலை கட்டியே தீருவோம் என்ற 30 ஆண்டுகால வாக்குறுதியை பாஜ நிறைவேற்றி உள்ளது.

பூமி பூஜையை தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, ‘ஜெய் சியா ராம்’ எனக்கூறி தனது பேச்சை தொடங்கினார். அவர் பேசுகையில், ‘‘தற்காலிக குடிசையில் பல ஆண்டாக வாழ்ந்த குழந்தை ராமருக்கான பிரமாண்ட கோயிலை கட்ட உள்ளோம். ராமர் கோயிலுக்காக பலரும் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர். அவர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். ராமர் எங்கும் உள்ளார். அனைவருக்குமானவர் அவர். ஒட்டுமொத்த மனித இனத்திற்கு உத்வேகம் அளிக்கும் இக்கோயில் இந்தியாவின் வளமான பாரம்பரியத்தின் ஓர் சிறந்த எடுத்துக்காட்டு. அயோத்தியின் பொன்னான பக்கங்களை இந்தியா உருவாக்கி இருக்கிறது. சகோதரத்துவம், பரஸ்பர அன்புடன் அனைவரும் தந்த கற்களின் மூலம் கட்டப்படும் இக்கோயிலின் மூலம் நூற்றாண்டு காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது’’ என்றார்.

பலத்த பாதுகாப்பு
* பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்றதால், அயோத்தியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
* பிரதமருக்கான எஸ்பிஜி சிறப்பு பாதுகாப்பு படையினர் கோயிலை சுற்றியும், வீடுகளின் மேற்கூரைகளிலும் நின்று  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
* மாவட்டத்தின் அனைத்து எல்லைகளும் சீலிடப்பட்டன.
* நூறு சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்பட்டன.
* விழா நடந்த கோயில் வளாகத்தை சுற்றி நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தொற்று இல்லை என உறுதிபடுத்தப்பட்டது.
* சாலைகளின் குறுக்கே கால்நடைகள் குறுக்கிடுவதை தடுக்க 500 பேரை மாவட்ட நிர்வாகம் பணி அமர்த்தி இருந்தது.

* ராமர் கோயில் - ஒரு பிரமாண்டம்
கட்டுமான பொருள்
கற்கள்: ராஜஸ்தானின் பரத்பூரில் இருந்து கொண்டு வரப்படும். இவை, ‘கற்களின் ராஜா’ என்ற பெருமைக்குரியவை. ராமர் கோயில் கட்டுவதற்கான நாடு முழுவதிலும் இருந்து அனுப்பப்பட்ட லட்சக்கணக்கான செங்கற்களும் பயன்படுத்தப்படும்.

* கட்டிட வடிவமைப்பு
கோயில் கட்டுமானத்தில் இரும்பு சுத்தமாக பயன்படுத்தப்படாது. கட்டிடத்தின் மேற்கூரைகள், சுவர்கள், கட்டமைப்புகள் அனைத்தும், பளுவை தாங்கும் வகையில் அடித்தளத்தில் இருந்தே கற்களால் எழுப்பப்படும்.
எண்ணிக்கை ஒரு நாளில் 80,000 முதல் 1 லட்சம் பேர் தரிசிக்க முடியும். கட்டுமான இலக்கு மூன்றரை ஆண்டில் கட்டி முடிக்க திட்டம்

* தரை
முழுவதும் விலை உயர்ந்த, தரமிக்க மார்பிள் கற்களால் அமைக்கப்படும்.

* தரைத்தளம்
கருவறை அமைக்கப்படும். நிகழ்ச்சிகள் நடக்கும் மேடைகளுடன் 3 மண்டபங்கள் இடம் பெறும்.

* முதல் தளம்
ராமர், சீதை, லட்சுமணன், அனுமன் சிலைகளுடன் பிரமாண்ட மண்டபமாக இருக்கும்.

* 2ம் தளம்

இது, முழுக்க முழுக்க கோயிலின் அழகை கூட்டுவதற்காக அமைக்கப்படும். இங்கு, பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.


* 29 ஆண்டு சபதத்தை நிறைவேற்றிய மோடி
ராமர் கோயில் கட்டுவதன் மூலம் பிரதமர் மோடி தனது 29 ஆண்டு கால சபதத்தை நிறைவேற்றி உள்ளார். கடந்த 1992ல், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கக் கோரி நடந்த திரங்கா யாத்திரையில் ஒருங்கிணைப்பாளராக மோடி, அயோத்தி வந்தார். அப்போது, ‘இனி ராமர் கோயில் கட்டும் போதுதான் மீண்டும் அயோத்தி வருவேன்’ என சபதமிட்டார். அதேபோல், 29 ஆண்டுக்குப் பின் சபதத்தை நிறைவேற்றி அவர் அயோத்தி வந்துள்ளார். இதற்கு முன், கடந்த ஆண்டு தேர்தல் பிரசாரத்திற்காக அயோத்தி எல்லையில் உள்ள பைசாபாத்-அபேத்கர்நகர் வரை சென்ற அவர், அயோத்தி செல்வதை தவிர்த்தார். ராம ஜென்ம பூமிக்கு வந்த முதல் பிரதமரும் மோடிதான். அதேபோல், அனுமன் கர்கி கோயிலுக்கு வந்த முதல் பிரதமரும் மோடியே.

* அயோத்தியில் நிலங்களின் விலை பல மடங்கு உயர்வு
சர்ச்சைக்குரியதாகவும், பதற்றமானதாகவும் கருதப்பட்டு வந்ததால் அயோத்தியில் ரியல் எஸ்டேட் நிலவரம் இதுவரை சாதாரணமாகவே இருந்தது. ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டவுடன் திடீரென்று, இப்பகுதியில் உள்ள நிலங்களின் மதிப்பு 3 மடங்கு உயர்ந்துள்ளது. காசி, கயா, ஷீர்டியை நோக்கி வரும் பக்தர்கள் இனி அயோத்திக்கும் அதிகளவில் வருவார்கள். ஆன்மிகத்தலம் என்பதுடன் பிரபலமான சுற்றுத்தலமாகவும் அயோத்தி மாறும் என்ற கணிப்பில் இதுபோல் நிலங்கள், வீட்டு மனைகளின் விலை உயர்ந்துள்ளதாக ரியஸ் எஸ்டேட் நிறுவனங்கள் கூறியுள்ளன.

* ராமர் என்றால் அன்பு ராகுல் காந்தி பெருமை
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பதிவில், ‘கடவுள் ராமர் மிக உயர்ந்த மனித மதிப்புகளின் ஒட்டுமொத்த உருவம். நம் இதயத்தில் ஆழமாய் பதிக்கப்பட்டுள்ள மனிதநேயத்தின் அடையாளம். ராமர் என்றால் அன்பு. ராமர் என்றால் இரக்கம். ராமர் என்றால் நீதி. எனவே, அவர் ஒருபோதும் வெறுப்பிலும், கொடுமையிலும், அநீதியிலும் தோன்ற முடியாது,’ என்று கூறியுள்ளார்.

* நவீன இந்தியாவின் சின்னம்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: ராமர் கோயில் கட்டுப்படுவதை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இக்கோயில் சட்டம், சமூக நல்லிணக்கம், மக்களின் ஆர்வத்தின் அடிப்படையில் கட்டப்படுகிறது. ராம ராஜ்ய சித்தாந்தங்களின் அடிப்படையிலான நவீன இந்தியாவின் சின்னமாக ராமர் கோயில் திகழும்.
வெங்கையா நாயுடு (துணை ஜனாதிபதி): அயோத்தியின் அரசாக, முன்மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்து காட்டியவர் ராமர். சாமானிய மக்களும், அரசை வழிநடத்துபவர்களும் பின்பற்றுவதற்கு தகுதியானவர்.
அமித்ஷா (மத்திய உள்துறை அமைச்சர்): பிரமாண்டமான ராமர் ஆலயத்தை அமைப்பது பிரதமர் மோடியின் உறுதியான மற்றும் தீர்க்கமான தலைமையை நிரூபிக்கிறது. இந்திய வரலாற்றின் பொன்னான தருணம் இது.
மோகன் பகவத் (ஆர்எஸ்எஸ் தலைவர்): ஆர்எஸ்எஸ் மற்றும் பிற சங் பரிவார் அமைப்புகளின் 30 ஆண்டு கனவு நிறைவேறி இருக்கிறது. ராமர் கோயில் அமைப்பதில் பாஜ மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, மறைந்த விஎச்பி தலைவர் அசோக் சிங்கால் ஆகியோர் முக்கிய பங்காற்றினர்.

ஆதித்யநாத் (உபி. முதல்வர்): பிரதமர் மோடி ஆட்சியில், இந்திய ஜனநாயகம் மற்றும் நீதித்துறையின் ஆற்றலின் மூலம், ஜனநாயக ரீதியாகவும், அரசியலமைப்புக்கு உட்பட்டும் ஓர் விஷயத்தில் தீர்வு காண்பது என்பது என உலகுக்கு நிரூபித்து காட்டப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையும், அறிவும் ராமர் கோயில் விவகாரத்தில் அமைதியான தீர்வு எட்டியுள்ளது.
ஜே.பி.நட்டா (பாஜ தேசிய தலைவர்): ராமர் கோயில் கட்டப்படுவது ஒரு வரலாற்றுத் தருணம். அனைவருக்கும் மகிழ்ச்சியை தரும் இத்தருணம், அனைவரையும் பெருமை கொள்ளச் செய்கிறது.
மம்தா பானர்ஜி (மேற்கு வங்க முதல்வர்): வேற்றுமையில் ஒற்றுமை காணும் பழைய மரபுகளை நம் நாடு எப்போதும் ஆதரித்து வருகிறது. இதை நாம் இறுதி மூச்சு உள்ள வரை பாதுகாக்க வேண்டும்.

அசோக் கெலாட் (ராஜஸ்தான் முதல்வர்): நாட்டின் பண்பாடு மற்றும் நாகரீகத்தில் ராமர் தனித்துவமான இடம் பிடித்துள்ளார். அவரது வாழ்க்கை உண்மை, நீதி, சமத்துவம், கருணை மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை நமக்கு கற்றுக் கொடுக்கிறது.
அரவிந்த் கெஜ்ரிவால் (டெல்லி முதல்வர்): ராமரின் அருள் நமக்கு தொடர்ந்து கிடைக்கட்டும், அவருடைய அருளால் நாடு வறுமையில் இருந்தும், ஏழ்மையில் இருந்தும் விடுபடட்டும். உலகின் சக்தி வாய்ந்த நாடாக இந்தியா எழுச்சிபெற்று, எதிர்காலத்தில் உலகிற்கே வழிகாட்டட்டும். ஜெய் ஸ்ரீராம், ஜெய் பஜ்ரங்பலி.

சசிதரூர் (காங். தலைவர்): ‘‘ராமர் அனைவருக்கும் நீதி, தார்மீக நெறி, நியாயம் மற்றும் அறரீதியான நடத்தை, அதில் தைரியம் ஆகியவற்றைக் குறிக்கிறார். இவை நாடுமுழுதும் பரவும் போது சகிப்பின்மையின் வெற்றி பெருமிதக் கூச்சலாக இருக்காது, ஜெய் ஸ்ரீராம்.
அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாடி தலைவர்): இன்றைய, எதிர்கால சந்ததியினர் ‘மரியாதை புருஷோத்தமர்’ காட்டிய வழியில் நடப்பார்கள், அது நம் அனைவருக்கும் அமைதியை வழங்குவதாகும்.
மாயாவதி (பகுஜன் சமாஜ் தலைவர்): பலதரப்பட்ட மதங்களின் புனித பூமி அயோத்தி என்பது அனைவரும் அறிந்ததே. அங்கு ராமர் கோயில் கட்டப்படுவதற்கான பெருமை உச்ச நீதிமன்றத்தையே சேரும். உச்ச நீதிமன்ற தீர்ப்பை அனைவரும் ஏற்க வேண்டும்.Tags : Ram temple ,Modi ,Ayodhya ,Bhoomi Puja , Ayodhya, Ram Temple to build, laid the foundation, Modi, Vedic Mantras, Bhoomi Puja
× RELATED சூரத் மெட்ரோ திட்டம், அகமதாபாத் மெட்ரோ...