×

யானைகள் லாரியை வழிமறித்ததால் மரத்தில் ஏறி தப்பிய டிரைவர், கிளீனர்: தமிழக- கர்நாடக எல்லையில் பரபரப்பு

சத்தியமங்கலம்: தமிழக- கர்நாடக எல்லையில் யானைகள் லாரியை வழிமறித்ததால் மரத்தில் ஏறி டிரைவர், கிளீனர் உயிர் தப்பிய பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதிக்குட்பட்ட ஆசனூர் வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த காட்டு யானைகள் தமிழக- கர்நாடக எல்லையில் உள்ள காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே முகாமிட்டு அங்கு சாலையில் சிதறிய கரும்பு துண்டுகளை தின்பதற்காக உலா வருகின்றன. நேற்று முன்தினம் மாலை கர்நாடக மாநிலம் மாண்டியாவில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிய லாரி சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு செல்வதற்காக தமிழக- கர்நாடக எல்லையில் காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே வந்து கொண்டிருந்தது.

லாரியை கர்நாடக மாநிலம் எலந்தூர் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் ஓட்டினார். கிளீனர் விநாயக் உடனிருந்தார். இந்த கரும்பு லாரியை யானைக்கூட்டம் சாலையில் வழிமறித்து நின்றதோடு, லாரியில் இருந்த கரும்புகளை தும்பிக்கையால் பறித்து தின்றன. இதை பார்த்த டிரைவர் மகேந்திரன், கிளீனர் விநாயக் இருவரும் லாரியின் மீது ஏறி அருகே இருந்த மரத்தின் மீது தாவி உயிர் தப்பினர். சுமார் அரை மணி நேரமாக யானைகள் லாரியை விட்டு நகராமல் நின்றன. டிரைவரும், கிளீனரும் மரத்தின் மேல் அமர்ந்தபடி அச்சமடைந்தனர். பின்னர் அவ்வழியே வந்த மற்றொரு கரும்பு லாரி, இந்த லாரியை ஒட்டி நிறுத்தப்பட்டு இருவரும் கீழே குதித்து தப்பினர். யானைகள் வனப்பகுதிக்குள் சென்றபின் லாரியை ஓட்டி சென்றனர்.

Tags : cleaner ,Karnataka ,border ,Tamil Nadu , Elephants, lorry, Tamil Nadu-Karnataka border
× RELATED இந்தி தெரியாது போ...கர்நாடகாவிலும் பரவியது