×

கொரோனா தடுப்பூசி விவகாரம்; ரஷ்யா வழிகாட்டுதல்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை பின்பற்ற வேண்டும்; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஜெனீவா: கொரோனா தடுப்பூசி விஷயத்தில் ரஷியா வழிகாட்டுதல்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை பின்பற்ற வேண்டும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்து உள்ளது. உயிர்க்கொல்லியான கொரோனா வைரசுக்கு தடுப்பூசி எப்போது வரும் என்பது உலகத்தின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு பல்வேறு கட்ட பரிசோதனைகளில் உள்ளன. ரஷியாவில் கமலேயா நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் பரிசோதனைகள் நிறைவு அடைந்து விட்டன. அக்டோபர் மாதம் தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு போட திட்டமிட்டிருக்கிறோம் என ரஷிய சுகாதார அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

கொரோனா தடுப்பூசி அடுத்த மாதத்திற்குள் சந்தையில் இருக்கும் என்றும், அக்டோபர் மாதத்திற்குள் வெகுஜன தடுப்பூசிகள் தொடங்கும் என்று  ரஷியா அறிவித்து இருப்பது உலக அரங்கை அதிர வைத்துள்ளது. உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸ் தடுப்பூசி செயல்பாட்டில் ரஷியா விரைந்து செல்வதை எச்சரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டியன் லிண்ட்மியர் கூறியதாவது; சில நேரங்களில் தனிப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் தாங்கள் ஏதாவது கண்டுபிடித்ததாகக் கூறுகின்றனர், இது நிச்சயமாக ஒரு சிறந்த செய்தி. ஆனால் ஒரு தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதும் வேலை செய்வதற்கும் இடையில், ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது.

தடுப்பூசிக்கு என நிறுவப்பட்ட நடைமுறைகள் உள்ளன மற்றும் வழிகாட்டுதல்கள் உள்ளன. தடுப்பூசி நிச்சயமாக, மக்கள் பயன்பாட்டுக்கு உரிமம் பெறுவதற்கு முன்னர் பல்வேறு சோதனைகள் அனைத்தையும் கடந்து செல்ல வேண்டும். அதிகாரப்பூர்வமாக ஏதாவது இருந்தால், ஐரோப்பிய அலுவலகத்தில் உள்ள எங்கள் சகாக்கள் நிச்சயமாக இதைக் கவனிப்பார்கள் பொதுவாக, ஒரு தடுப்பூசியின் பாதுகாப்பான வளர்ச்சியை எவ்வாறு கையாள்வது என்பதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் ஒழுங்குமுறைகள், விதிகள் உள்ளன. இவை நிச்சயமாக பின்பற்றப்பட வேண்டும் என கூறினார்.

Tags : World Health Organization ,Corona ,Russia , Corona, vaccine, Russia, World Health Organization, Warning
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...