போக்குவரத்து வீதிமீறலுக்கு ஆன்லைனில் அபராத தொகை செலுத்துவதில் குளறுபடியால் ஓட்டுநர்கள் அவதி

மதுரை: தமிழகத்தில் தலைக்கவசம், ஓட்டுநர் உரிமம் உட்பட 12க்கும் மேற்பட்ட போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீது அபராதம் வசூலிக்க கடந்தாண்டு இ-சலான் திட்டம் அமல் படுத்தப்பட்டது. அனைத்து விதிமீறலுக்கும் உரிய அபராதத் தொகையை டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலமே வசூலிக்கப்படுகிறது. குடிபோதையில் வாகனம் ஓட்டுவோருக்கு மட்டும் அபராத தொகை குறிப்பிடாமல் இ-சலான் ரசீது வழங்கி நீதிமன்றத்தில் செலுத்த போலீஸார் அறிவுறுத்தி அனுப்புகின்றனர்.

இந்நிலையில் டெபிட், கிரெடிட் கார்டுகள் வசதி இல்லாதவர்களுக்கு விதிமீறல்கள் விவரம் அடங்கிய இ-சலான் ரசீது வழங்கப்படுகிறது. இதன்மூலம் குறிப்பிட்ட நாட்களுக்குள் எஸ்பிஐ வங்கி, இ- சேவை மையங்கள் அல்லது ஆன்லைனில் உரிய அபராதத் தொகையை செலுத்தவேண்டும். இல்லையெனில் வாகனத்தை உரிமம் ரத்து, பறிமுதல் போன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என சம்பந்தப்பட்ட போலீஸார் வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்புகின்றனர்.

இருப்பினும் அரசு இ-சேவை மையம், வங்கியில் அபராதத் தொகையை பெரும்பாலும் செலுத்த முடியாத சூழல் உள்ளது. இ-சேவை மையங்களில் அலைக்கழிக்கப்படுவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர். சொந்தமாக மொபைல் போன், கம்ப்யூட்டர் மூலம் ஆன்லைனில் செலுத்த முயன்றால் வாகன பதிவெண், எஞ்சின், சேஸ் எண் போன்ற விவரங்களை குறிப்பிட வேண்டும்.

இவற்றை பதிவிட்டு சென்றாலும், பணம் செலுத்துவதில் சிக்கல் உள்ளது. சம்பந்தமின்றி விதிமீறல் விவரம் வருகிறது. மேலும், குறிப்பிட்ட நாட்களுக்குள் இ-சலான் ரசீதில் இடம் பெறும் விவரங்கள் அழிந்துவிடுகின்றது. இதுபோன்ற குளறுபடியால் அபராதம் செலுத்த முடியாமல் போலீஸாரால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுமோ என்ற அச்சமும் ஏற்படுகிறது. இத்திட்டத்தை எளிமையாக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: