புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமிக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரி: புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் கந்தசாமிக்கு கடந்த 2 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் இன்று கந்தசாமி உட்பட அவரது குடும்பத்தினர் 9 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

பரிசோதனை முடிவில் அமைச்சர் கந்தசாமிக்கும், அவரது இளைய மகன் விக்னேஸ்வரனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் வந்ததும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரது வீட்டிற்கு சென்று கொரோனா பாதிப்பு குறித்து தெரிவித்தனர். இதனையடுத்து அமைச்சர் கந்தசாமி மற்றும் அவரது மகன் விக்னேஸ்வரன் ஆகியோரை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்க சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

புதுச்சேரியில் கடந்த 2 வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த ஒருவாரத்தில் மட்டும் 800க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உயிரிழப்பும் அதிகரித்துள்ளது. இன்று ஒருநாளில் மட்டும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதற்கிடையில் கடந்த 24ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்ற என்.ஆர் காங்கிரஸ் உறுப்பினர் ஜெயபாலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்ததை அடுத்து ஜெயபால், அவரது மனைவி, மகன் ஆகியோர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இந்நிலையில் அமைச்சர் கந்தசாமிக்கும் அவரது மகனுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது புதுச்சேரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: