கர்நாடக அணைகளிலிருந்து காவிரியில் 44,000 கனஅடி நீர் திறப்பு..: ஒகேனக்கல் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

தருமபுரி: தருமபுரிமாவட்டம் ஒகேனக்கல் காவிரி கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு மாவட்டங்களான குடகு, சிக்மகளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. கடந்த 2 தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக மாண்டியா மாவட்டம் கண்ணம்பாடியில் உள்ள கிருஷ்ணராஜ சாகர அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, இந்த அணைக்கு நீர்வரத்து 20,500 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 4,700 கன அடியாகவும் உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 124 அடியாக உள்ள நிலையில், தற்போது 108 அடி வரை நீர் நிரம்பியுள்ளது. அதே வேளையில், கேரள மாநிலம் வயநாடு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. சற்றுமுன் நிலவரப்படி, இந்த அணைக்கு 35,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையின் மொத்த கொள்ளளவு 84 அடியாக உள்ள நிலையில், தற்போது 80 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. எனவே, அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. அதாவது, கபினி அணையில் இருந்து சுமார் 40,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நீர் அனைத்தும், தமிழகத்தை நோக்கி தற்போது வந்துகொண்டிருக்கிறது. எனவே, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளிலிருந்து காவிரியில் 44,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் ஆலம்பாடி, ஊட்டமலை பகுதிகளில் தாழ்வாக வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நல்ல மழையால் நீர் நிலைகள் நிரம்பியுள்ள நிலையில், பவானி சாகர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழையால் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: