மணல் விற்பனை தொடர்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!!!

மதுரை: மணல் விற்பனை தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் மணல் கொள்ளையானது சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் மணல் கொள்ளை தொடர்பாக தஞ்சையை சேர்ந்த ஜீவகுமார் என்பவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார். இந்த மனுவில் வேளாண் மண்டலங்களில் மணல் எடுப்பது மற்றும் மணல் திருட்டால் நிலத்தடி நீர் மட்டம் பெரிதும் பாதிப்படைவதாக கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த பகுதிகளில் நிலத்தடி நீர் குறைவதால் விவசாயமும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆற்றில் மணல் எடுக்க அதிக ஆழத்துடன் குழிகள் தோண்டப்படுவதால் உயிரிழப்புகளும் அதிகரிக்கின்றன. இதனால் உடனடியாக மணல் கடத்தலை தடுக்க சோதனை சாவடிகளை அமைக்க உத்தரவிடக்கோரி மனுவில் கூறப்பட்டுள்ளது.  தற்போது இந்த வழக்கானது விசாரணைக்கு வந்த நிலையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் ஆற்று மணல் எடுக்க விதிகள் எதுவும் உருவாக்கப்படவில்லை என தமிழக அரசு கூறியுள்ளது. இதனையடுத்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் இதுதொடர்பாக தமிழக அரசு வழக்கறிஞரிடம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர். அதாவது வேளாண் மண்டலங்களில் எடுக்கப்படும் மணல் அரசு கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படுகிறதா?

அப்படி மணல் விற்பனை செய்யப்பட்டால் ஒரு யூனிட் விலை என்ன? என வினவியுள்ளனர். பின்னர் இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் மணல் விற்பனை தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற செப்டெம்பர் 2ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: