×

அதிகரித்து வரும் காவல்நிலைய மரணங்கள் குறித்து பதிலளிக்க தேசிய மனித உரிமை ஆணையம், மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: அதிகரித்து வரும் காவல்நிலைய மரணங்கள் குறித்து பதிலளிக்க தேசிய மனித உரிமை ஆணையம், மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் திலிப் கே.வாசு என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், இந்தியாவில் 2001 முதல் 2018ம் ஆண்டில் 1,727 காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளது. இவற்றில் பல வழக்குகளின் விசாரணை இன்னும் நடந்து வருகிறது. குறிப்பாக 2017, மற்றும் 2018ம் ஆண்டுகளில் மட்டும் சுமார் 148 காவல்நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளது, என தெரிவித்திருந்தார். மேலும், இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் 2 வழக்குகளில் மட்டுமே காவல் அதிகாரிகளுக்கு எதிராக குற்ற வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 38 வழக்குகளில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அதுமட்டுமல்லாது, தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு 2.2 சதவிகித காவல் மரணங்கள் குறித்து மட்டுமே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியிருந்த மனுதாரர், தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கையின்படி 70 காவல் மரணங்களில் 2ல் மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கானது உச்சநீதிமன்ற நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிகரித்து வரும் காவல்நிலைய மரணங்கள் குறித்து உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. மேலும், நாடு முழுவதும் அதிகரித்து வரும் காவல் மரணங்கள் குறித்து பதிலளிக்க தேசிய மனித உரிமை ஆணையத்திற்கும், மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாநிலங்களில் மனித உரிமை ஆணையங்கள் செயல்படுகின்றனவா? என்பது குறித்த தகவலை மாநிலங்களிடம் இருந்து பெற்று ஒரு விரிவான அறிக்கையை அளிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து, இவ்வழக்கு விசாரணையை ஆகஸ்டு 26ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tags : government ,National Human Rights Commission ,Supreme Court ,police deaths ,lockup deaths , lockup deaths, National Human Rights Commission, Federal Government, Supreme Court
× RELATED அரசியல்வாதிகளுக்கு எதிரான 4,600...