விநாயகர் சதுர்த்தியை பாதுகாப்புடன் எப்படி நடத்துவது?: இந்து மத தலைவர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை.!!!

சென்னை: கொரோனாவை கட்டுப்படுத்த , ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும், 31.8.2020 நள்ளிரவு 12 மணி வரை தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு  நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆகஸ்ட்  மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் (2.8.2020, 9.8.2020, 16.8.2020, 23.8.2020 & 30.8.2020) எவ்வித தளர்வுகளும் இன்றி, தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஏற்கனவே அரசு அறிவித்துள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய திருக்கோவில்கள், அதாவது 10,000 ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள  திருக்கோவில்களிலும், சிறிய மசூதிகளிலும், தர்காக்களிலும், தேவலாயங்களிலும் மட்டும் மாவட்ட ஆட்சித்தலைவர்களின் அனுமதியுடன் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படும். பெரிய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில்  உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் , பொது மக்கள் தரிசனம் அனுமதிக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, தமிழகத்தில் சிறப்பாக கொண்டப்படும் விநாயகர் சதுர்த்தி விழா ஆகஸ்ட் 22-ம் தேதி  கொண்டாடப்பட உள்ளது. கடந்த காலங்களில் விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தில் முக்கிய நிகழ்வாக விநாயகர் சிலைகளை வாகனங்களில் எடுத்துச்சென்று கடல், ஆறு, குளங்களில் கறைப்பது  வழக்கம். ஊரடங்கு காரணமாக பொதுப்போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், விநாயகர் சதுர்த்தியை கொண்டாட அனுமதி அளிக்குமாறு தொடர்ந்து தமிழக அரசுக்கு வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனையில்  ஈடுபட்டுள்ளார். விநாயகர் சதுர்த்தியை பாதுகாப்புடன் கொண்டாடுவது குறித்து 17 இந்து மத தலைவர்களுடன் இந்த ஆலோசனையானது நடைபெற்று வருகிறது. ஆலோசனை கூட்டத்திற்கு பின் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது தொடர்பான  வழிமுறைகளை தமிழக அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: