×

வாகனங்கள் கிடைப்பதில்லை கொரோனா குணமானவர்கள் வீடு திரும்ப முடியாமல் அவதி: 108 ஆம்புலன்ஸ் மீண்டும் அழைத்து செல்லுமா?

திருச்சுழி: கொரோனா தொற்று  ஏற்பட்டு சிகிச்சைக்கு செல்பவர்கள் குணமான பின்பு பின் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் அவதிப்படுகின்றனர். ஒருவரும் வாகனத்தில் அழைத்து செல்ல முன்வருவதில்லை என புலம்புகின்றனர்.  விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. இதில் குறிப்பாக நரிக்குடி பகுதி மூன்று மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ளதால் வெளி மாவட்ட நபர்கள் குறுக்கு வழியாக மாவட்டத்திற்குள் சுலபமாக நுழைந்து விடுகின்றனர்.  அதிகாரிகள் முன்பு காட்டிய கடுமையான சோதனை தற்போது தளர்ந்ததால் மதுரை பகுதியிலிருந்து வருகின்ற நபர்கள் இந்த பகுதியை தேர்ந்தெடுத்து மாவட்டத்திற்குள் புகுந்து விடுகின்றனர். தற்போது திருச்சுழி, நரிக்குடி பகுதியில் கொராேனா தொற்று ஆயிரத்தை நெருங்கும் நிலையில் வருவாய்துறையினர் கட்டுப்படுத்த வழியின்றி திணறி வருகின்றனர்.

சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘நரிக்குடி, திருச்சுழி பகுதியில் சுமார் 250க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் சமூக இடைவெளியின்றி நடமாடுவதாலும், முக கவசமின்றி சுற்றுவதாலும் தொற்று அதிகரித்துள்ளது. அதிகாரிகள் எச்சரிக்கை  விடுத்தாலும் பொருட்படுத்தாமல் உள்ளனர். தற்போது தொற்று ஏற்படும் நபர்களை  சாத்தூர், காரியாபட்டி, அருப்புக்கோட்டை போன்ற பகுதிகளுக்கு சிகிச்சைக்காக 108 வாகனம் மூலம் அழைத்து செல்கின்றனர். சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் போது வாகனமின்றி பரிதவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எனவே தொற்று குணமடைந்த நபர்களை சிகிச்சை முடிந்த பின்பு மீண்டும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டும்’’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : healers ,Corona ,home , Vehicles ,Corona, healers , ambulance,
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...