×

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நலமுடன் உள்ளார்: மருத்துவமனை அறிக்கை!

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நலமுடன் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், 7ம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் அரசு அதிகாரிகள், காவல்துறையினர், மருத்துவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோருக்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆளுநர் மாளிகையில் உள்ள ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டதில் 84 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன் 38 பேருக்கு பரிசோதனை செய்ததில் 3 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. ஆளுநர் உதவியாளர் தாமசும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.

இதையடுத்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு மருத்துவர்கள் மேற்கொண்ட வழக்கமான மருத்துவப் பரிசோதனையில் அவர் ஆரோக்கியமாக இருப்பது தெரியவந்தது. இருந்தபோதும் அவர் தன்னை 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து ஆளுநர் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டதாக ஆளுநர் மாளிகை தெரிவித்தது. தனிமைப்படுத்துதலுக்கு பிறகு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மருத்துவ பரிசோதனைக்காக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு சென்றார். அங்கு, பரிசோதனை மேற்கொண்டதில் ஆளுநர் பன்வாரிலாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நலமுடன் உள்ளார் என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அறிகுறிகள் இன்றி நலமுடன் இருக்கும் ஆளுநரை மருத்துவக் குழுவினர் கண்காணித்து வருகின்றனர் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags : Governor ,Banwarilal Purohit ,Tamil Nadu , Corona, Governor of Tamil Nadu Banwarilal Purohit, Kaveri Hospital
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...