×

பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பாபநாசம் அணை இன்று திறப்பு: சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 12 அடி உயர்வு

நெல்லை: பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பாபநாசம் அணை இன்று திறக்கப்படுகிறது. மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் சேர்வலாறு அணை நீர்மட்டம் 12 அடி அதிகரித்துள்ளது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் பாசன தேவைக்கு முக்கிய நீராதாரமாக இருப்பது பாபநாசம் அணை. இந்த அணை மூலம் ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை காலத்தில் கார் பருவ நெல் சாகுபடியும், அக்டோபர் மாதம் துவங்கும் வடகிழக்கு பருவமழை காலத்தில் பிசான பருவ நெல் சாகுபடியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பாபநாசம் அணை நீர்மட்டம் குறைவாக இருந்ததால் ஜூன் 1ம் தேதி கார் பருவ சாகுபடிக்கு அணை திறக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் கார் பருவத்திற்காக நாற்றங்கால்கள் கூட தயார் செய்ய முடியாமல் போனது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 61.90 அடியாக இருந்தது. நேற்று ஐந்தரை அடி உயர்ந்து 67.60 அடியானது. அணைக்கு விநாடிக்கு 4076 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 454.75 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. 77.03 அடியாக இருந்த சேர்வலாறு அணை நீர்மட்டம், நேற்று 12 அடி உயர்ந்து 88.84 அடியாக உள்ளது.

அணைப்பகுதியை பொறுத்தவரை, பாபநாசம் மேலணையில் 33 மிமீ, கீழணையில் 18 மிமீ மழை பதிவாகி உள்ளது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 62.10 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 48 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 55 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணைப்பகுதியில் 4.8 மிமீ மழை பதிவாகி உள்ளது. இதனிடையே பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர், நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: நெல்லை மாவட்டத்தின் தாமிரபரணி பாசன பரப்பில் அமைந்துள்ள கோடை மேலழகியான், நதியுண்ணி மற்றும் கன்னடியன் அணைக்கட்டுகளின் மூலம் பாசன வசதி பெறும் கால்வாய் பகுதிகளில் ஆங்காங்கே உள்ள பயிர்களை காக்கவும், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைகளுக்காகவும் பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

அவர்களின் வேண்டுகோளினை ஏற்று சிறப்பு நிகழ்வாக 5ம் ேததி (இன்று) முதல் 14ம் தேதி வரை 10 நாட்களுக்கு 691.20 மி.க. அடிக்கு மிகாமல் தண்ணீரை திறந்துவிட உத்தரவிட்டுள்ளேன். மேற்கண்ட கால்வாய் பகுதிகளில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் பாசனம், கால்நடை மற்றும் பொதுமக்களின் குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

4 கால்வாய்கள் பயன்பெறும்
நெல்லை மாவட்டத்தில் வடக்கு, தெற்கு கோடை மேலழகியான் கால்வாய், நதியுன்னி கால்வாய், கன்னடியன் கால்வாய், கோடகன் கால்வாய், நெல்லை கால்வாய், பாளையங்கால்வாய் ஆகிய 7 கால்வாய்கள் பாபநாசம் அணைக்குட்பட்டு உள்ளன. இதில் வடக்கு, தெற்கு கோடை மேலழகியான் கால்வாய், நதியுன்னி கால்வாய், கன்னடியன் கால்வாய் ஆகிய 4 கால்வாய்களில் மட்டுமே இன்று முதல் 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் குடிநீர் தேவை, ஏற்கனவே பயிர் செய்துள்ள வாழை உள்ளிட்ட பயிர்கள் பயன்பெறும். மழை தொடர்ந்து பெய்து பாபநாசம் அணையின் நீர்மட்டம் உயரும் பட்சத்தில் பிற கால்வாய்களிலும் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



Tags : Papanasam Dam ,Chervalaru Dam , irrigation ,drinking, water, Chervalaru, Dam water
× RELATED பாபநாசம் அணையில் இருந்து திறந்துவிடும் தண்ணீரை குறைக்க வேண்டும்