×

வங்கக்கடலில் புயல் சின்னம் பாம்பன் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

ராமேஸ்வரம்: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ள நிலையில் மீனவர்கள் கடலுக்கு செல்ல நேற்று அனுமதி வழங்கவில்லை. இதனால் பாம்பனில் விசைப்படகுகள் அனைத்தும் கரை நிறுத்தப்பட்டன.வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் கடலில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும் என கூறப்படுகிறது. இதனால் நேற்று முதல் வரும் 7ம் தேதி வரை மன்னார் வளைகுடா கடல், வடக்கு மற்றும் மேற்கு மத்திய வங்கக்கடல், மேற்கு வங்கம், ஓடிசா, ஆந்திரா கடற்பகுதியிலும், தென்மேற்கு, மேற்கு மத்திய கிழக்கு மத்திய அரபிக்கடல், தெற்கு குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, லட்சத்தீவுகள் மற்றும் மாலத்தீவு, அந்தமான் கடல் பகுதியிலும் மணிக்கு சுமார் 50 முதல் 60 கி.மீ வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதன் காரணமாக அடுத்த 24 மணிநேரம் வரை ஆந்திரம், கர்நாடகா, கேரளா, லட்சத்தீவு, மற்றும் தென் தமிழகத்தின் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரையிலான கடல் பகுதியில் சுமார் 2.5 மீட்டர் முதல் 3.9 மீட்டர் உயரம் வரையிலான பேரலைகள் உருவாகும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, மன்னார் வளைகுடா கடல் பகுதியில் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.ராமேஸ்வரம் மீன்வளத்துறை உதவி இயக்குனரின் உத்தரவுப்படி நேற்று பாம்பன் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து பாம்பன் கடற்கரை துறைமுகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகள், ஏராளமான நாட்டுப்படகுகள் கரை நிறுத்தப்பட்டிருந்தன. இதுபோல் மண்டபம் உள்ளிட்ட மன்னர் வளைகுடா கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களும் நேற்று கடலுக்கு செல்லவில்லை.

7 மீனவர்கள் மாயம்
ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இரவு முழுவதும் மீன்பிடித்து நேற்று காலை அனைத்து படகுகளும் கரை திரும்பிய நிலையில் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் பாக்கியம் படகில் சென்ற முனியசாமி, வாப்பா, திரவியம், சவரியா மெல்டன் உட்பட 7 மீனவர்கள் கரை திரும்பவில்லை. இதுகுறித்து ராமேஸ்வரம் மீன்வளத்துறை அலுவலகத்தில் படகு உரிமையாளர் பாக்கியம் நேற்று புகார் அளித்தார். மேலும் படகையும், மீனவர்களையும் தேடி செல்வதற்கு அனுமதியும் கேட்டுள்ளார். நேற்று முதல் கடலில் பலத்த காற்று வீசுவதால் படகுடன் கரை திரும்பாத மீனவர்கள் குறித்து மீனவர்களின் உறவினர்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Tags : fishermen ,Pamban ,Bay of Bengal ,sea , Storm ,symbol ,Bay ,Bengal Pamban , sea
× RELATED மீனவர்கள் கோரிக்கையை ஏற்று ஒருநாள்...