×

சமூக வலைதள வீடியோக்களுக்கு தணிக்கை கோரி வழக்கு; மத்திய, மாநில அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் வீடியோக்களை தணிக்கை செய்ய தனிவாரியம் ஒன்றை அமைக்கக்கோரிய வழக்கில் மத்திய மாநில அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமீபகாலமாக சமூக வலைதளங்களில் கந்த சஷ்டி விவகாரம், வனிதா விஜயகுமார் திருமணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பேசுபொருளாகவும், சர்ச்சையாகவும் மாறிவருகிறது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் வீடியோக்களை தணிக்கை செய்ய தனி வாரியம் ஒன்றை அமைக்க உத்தரவிடக்கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சுதன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஆன்லைன் மூலம் பயின்று வருவதாலும், பல்வேறு தரப்பினரும் தற்போது வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் வேலை செய்து வருவதாலும், இன்டர்நெட் பயன்பாடு அதிகரித்துள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ள அவர், இதுபோன்ற சூழலில் எந்தவித கட்டுப்பாடும் இன்றி யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பல்வேறு சர்ச்சைக்குரிய வீடியோக்கள் பதிவிடப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். குறும்படம் என்ற பெயரில் ஆபாச வீடியோக்கள் அதிகம் பதிவிடப்படுவதாக மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவில் கோடிக்கணக்கான நுகர்வோர் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வரும் போதிலும், அதற்கென எந்தவித தணிக்கை முறையும் இல்லை எனவும், திரைப்படங்களை தணிக்கை செய்ய சென்சார் போர்டு உள்ளதைப் போல சமூக வலைதளங்களை தணிக்கை செய்யவும் தனி அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். வீடியோக்களை தணிக்கை செய்ய வாரியம் அமைக்கும் வரை, சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரியுள்ளார். இந்த மனு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அமர்வு இன்று விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கு தொடர்பாக நான்கு வார காலத்திற்குள் மத்திய மாநில அரசு பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்.

Tags : Governments ,State ,The High Court ,Central , Social Website Videos, Audit, State Government, High Court
× RELATED நீட் தேர்வை மாநில அரசுகளின்...