×

அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா : நூற்றாண்டு கால அயோத்தி பிரச்சினை, இன்று சாதனை சரித்திரமாக மாறுகிறது!!!

லக்னோ : அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடக்கிறது. இதில், பிரதமர் மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறார். இந்த விழாவுக்கு சாமியார்கள், விஐபி.க்கள் உட்பட 175 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு, அயோத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

* அயோத்தி சர்ச்சையும், வழக்கின் முடிவும்...
1528: ராமர் பிறந்ததாக நம்பப்படும் அயோத்தியில், மொகலாயப் பேரரசின் முதல் அரசர் பாபரின் படைத் தளபதி மீர் பாகியால் பாபர் மசூதி கட்டப்பட்டது.
1853: மசூதி கட்டப்பட்ட இடத்தில் நடந்த இந்து- முஸ்லிம் கலவரத்தில் 75 பேர் கொல்லப்பட்டனர்.
1949: ராமர் - சீதை சிலைகள் பாபர் மசூதிக்குள் வைக்கப்பட்டது. இதற்கு முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், கோயில் வளாகத்தை அரசு மூடியது.
1984: ராமர் கோயில் கட்டுவதற்காக விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு, ராமஜென்ம பூமி இயக்கத்தைத் தொடங்கியது.
1986: பிப் 1: இந்து மக்கள் பூஜை செய்வதற்காக கோயில் வளாகத்தை திறக்க அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை அமல்படுத்தியதால், நாட்டின் பல பகுதிகளில் இருதரப்புக்கும் இடையே மோதல் நடந்தது. இப்பிரச்னைக்கு சுமூகத் தீர்வு காண, பாபர் மசூதி கமிட்டியை அரசு அமைத்தது.
1989: ஜூலை 10: அலகாபாத்தின் உயர்நீதிமன்றக் கிளையான லக்னோ நீதிமன்றம், ராமர் கோயில் தொடர்பான அனைத்து வழக்குகளையும் பைசாபாத் நீதிமன்றத்தில் இருந்து உயர் நீதிமன்றத்துக்கு மாற்றியது. நவ. 9: சர்ச்சைக்குரிய இடத்தில் கோயிலுக்காக அடிக்கல் நாட்டப்பட்டது.
1990: ராமர் கோயில் கட்டும் கோரிக்கையை வலியுறுத்தி, சோம்நாத்தில் இருந்து அயோத்தியை நோக்கி பாஜ தலைவர் எல்.கே அத்வானி ரதயாத்திரை தொடங்கினார். ஆனால், பீகாரில் அது தடுத்து நிறுத்தப்பட்டது.
1992: டிச.6: கரசேவகர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
2003: நீதிமன்ற உத்தரவுப்படி நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில், மசூதியின் அடியில் ஏற்கனவே கோயில் இருந்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
2005: சர்ச்சைக்குரிய இடத்தில் வெடிகுண்டு நிரம்பிய ஜீப் மூலம் தாக்குதல் நடத்த முயன்ற தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
2010: செப்.30: சர்ச்சைக்குரிய இடத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம்லாலா அமைப்புகள் சமமாக பிரித்துக் கொள்ள அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
2011: மே 9: இந்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
2019: ஆக.6: ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, அயோத்தி வழக்கை 40 நாட்கள் தொடர்ந்து விசாரிக்கத் தொடங்கியது. நவ. 9: சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என உச்ச நீதிமன்றம் இறுதித்தீர்ப்பு அளித்தது.
2020: பிப். 5: ராமர் கோயில் கட்டுவதற்கான ‘ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா’ என்ற அறக்கட்டளையை மத்திய அரசு அமைக்கிறது.

புதிதாக கட்டப்பட உள்ள ராமர் கோயிலின் பிரமாண்ட தோற்றம்: 67 ஏக்கரில் கோயில்
* அயோத்தில் ராமர் கோயில் வளாகம் 67 ஏக்கரில் அமைகிறது.

* கோயில் மட்டுமே 10 ஏக்கரில் அமைக்கப்படுகிறது.

* வடமாநில பாணியில் கோயில் கட்டப்படுகிறது.

* கோயிலின் மொத்த உயரம் 161 அடியாக இருக்கும்.

* கோயிலில் 5 மண்டபங்கள், ஒரு ராஜகோபுரம் அமைக்கப்படுகிறது.

* கோயிலில் அமைக்கப்பட உள்ள படிக்கட்டுக்கள் 16 அடி அகலம் கொண்டவையாக இருக்கும்

* முதலில் கர்ப்பகிரக மண்டபம், கூட மண்டபம், ரிருத்திய மண்டபம் கட்டுவதற்கு மட்டுமே திட்டமிடப்பட்டு இருந்தது. தற்போது கூடுதலாக 3 மண்டபங்கள் அமைக்கப்படுகிறது. இவை கீர்த்தன மண்டபம், ரங் மண்டபம், பிரார்த்தனை மண்டபம் என பெயரிடப்பட்டுள்ளது.

* வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பாக ஷில்ப சாஸ்திரத்தின் அடிப்படையில் கோயில் 3 தளங்களாகவும், 360 தூண்கள் கொண்டதாகவும் அமைக்கப்படுகின்றது. முதல் தளத்தில் 160 தூண்கள், 2வது தளத்தில் 132 தூண்கள், 3வது தளத்தில் 72 தூண்களும் அமைக்கப்படுகின்றது.

* ஏற்கனவே இருந்த கோயில் வடிவமைப்பை அடிப்படையாக வைத்தே புது கோயிலும் அமைக்கப்படுகின்றது.

* கருவறை எண்கோண வடிவில் உருவாக்கப்படுகிறது.

* ராமர் கோயில் வளாகத்தில் கூடுதலாக மேலும் 4 சிறு கோயில்கள் அமைக்கப்பட உள்ளது.

* ராமர் கோயில் வடிவமைப்பாளரின் பெயர் சந்திரகாந்த் சோம்புரா. குஜராத்தை சேர்ந்தவர். இவரது முன்னோர்கள் தான் சோம்நாத் கோயிலை வடிவமைத்தனர்.

* கோயில் கட்டுமானத்துக்கான கற்கள் ராஜஸ்தானின் வன்சி மலையில் இருந்து வெட்டி எடுக்கப்படுகின்றது.

* 30 ஆண்டுகளாக ஏராளமான செங்கற்கள் ராமர் கோயில் கட்டுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவற்றில் அந்தந்த மொழிகளில் ஸ்ரீராம் என எழுதப்பட்டுள்ளது. சுமார் 2 லட்சம் செங்கற்கள் கோயில் அமையவுள்ள இடத்தில் குவித்து  வைக்கப்பட்டுள்ளது. இவையும் கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்படும்.

* கோயில் கட்டுமான பணி முடிய 3 முதல் மூன்றரை ஆண்டுகளாகும்.

Tags : Ayodhya , Ram Temple Foundation Ceremony in Ayodhya: Century Ayodhya issue, today turns into record history !!!
× RELATED கம்பராமாயண நுணுக்கங்கள்